கொரோனாவில் மதம் தேடும் மனிதர்கள்

பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ்-

“சமூகத் தூரப்படுத்துதல் சமூக ஒருமைப்பாடு இவற்றின் மூலம் மக்களின் எதிரியான கொரோனாவைத் தோற்கடிப்போம்” என்று சில வாரங்களுக்கு முன்னர் ஆங்கிலத்தில் ஒரு முகநூல் பதிவை இட்டிருந்தேன்.

தமிழ் நாடு உள்ளிட்ட பல இந்திய மாநிலங்களையும் இலங்கையையும் தவிர வேறு எந்த நாட்டிற்கும் இப்படியொரு பதிவு அவசியமில்லை. “முகக் கவசம் அணிவோம்; சமூக தூரப்படுத்தலைப் பேணுவோம்” என்று எழுதினால் போதுமானது. சீனா , அமெரிக்கா , கனடா , ஐரோப்பா எங்கும் இதனைப் பயன்படுத்தலாம்.

மத வெறுப்பும் இனவாதமும் தூண்டப்பட்டுக் கொரோனாவிலும் மக்களைக் கூறுபோட்டு வேடிக்கை பார்க்கும் எமது பிராந்திய நாடுகளின் நிலைமை மோசமானது. சாதாரண மக்களிடையே சமாதான உறவுகள் மேலோங்கி இருந்தாலும் சில ஊடகங்கள் , சில அரசியல்வாதிகள் , சில சமயவாதிகள் கொரோனாவையும் ஆயுதமாகப் பயன்படுத்தி மக்களைப் பிரிக்கும் முயற்சியில் வெளிப்படையாக ஈடுபட்டுள்ளனர். கொரோனாவின் மொத்த வியாபாரிகளாகவும் பொறுப்பற்றவர்களாகவும் முஸ்லிம்கள் சித்திரிக்கப்படுகின்றனர்.

சீனாவில் வுஹான் மாகாணத்தில் தோன்றிய கோவிட்- 19 இத்தாலியில் இருந்து வந்தவர்களால்தான் இலங்கையில் அதிக அளவில் அறிமுகமானது. அவர்கள் இலங்கை; கிறிஸ்தவர்கள். பெரும்பான்மையாக வாழும் புத்தளம் மாவட்டம் இப்பிரச்சினைக்கு முகங்கொடுத்தது. ஆனால் மாவட்டம் , இனம் , சமயம் என்ற நோக்கில் யாரும் இதனைப் பார்க்கவில்லை. பார்க்கப்பட வேண்டியதில்லை. எனினும், கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

150 நாடுகளுக்கும் மேல் கோவிட் 19 பரவி பல இலட்சம் மக்களை பாதிப்புக்குள்ளாக்கி பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்களைப் பலியெடுத்த பின்னர்தான் இலங்கை தனது கொரோனா எதிர்ப்புச் சட்டங்களையும் நடவடிக்கைகளையும் பலப்படுத்துகிறது. உலகளாவிய தொற்று நோயாக மாறியுள்ள நிலையில் இலங்கை அதிலிருந்து தப்புவது என்பது கடினமான ஒன்று. இலங்கை ஒரு தீவு என்பதால் கொரோனா இலங்கையில் தொற்றிக் கொள்வதாயின் அதை யாராவது ஒருவர் அல்லது பலர் இங்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

ஜனவரி 27ம் திகதி 44 வயது சீனப் பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதாக இலங்கை அரசு அறிவித்தது. ஹூப்பெய் மாகாணத்தைச் சேர்ந்த அந்தப் பெண்மணி மற்றும் பல சுற்றுலாப் பயணிகளோடு இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணி தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் சேர்க்கப்பட்டு பெப்ரவரி 19ல் சுகமாகி வெளியேறுகிறார். பெரிய கொண்டாட்டத்தோடு சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராய்ச்சி பத்திரமாக அவரை சீனாவுக்கு வழியனுப்புகிறார். அதன் மூலம் உலக சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை சுற்றுலாவுக்கு ஏற்ற நாடு என்று தவறான சமிக்ஞை வழங்கப்பட்டது.

இலங்கை கொரோனாவின் பிடிக்குள் சிக்கிய கதை சீனப் பெண்ணிலிருந்துதான் ஆரம்பமாகிறது. ஏன் இலங்கை விமான நிலையம் முடக்கப்படவில்லை? சீனாவிலிருந்தும் கொரோனா பரவும் ஏனைய நாடுகளிலிருந்தும் வருவோரையும் சுற்றலாப் பயணிகளையும் உடனடியாகத் தடை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. விமானப் பயணங்கள் நிறுத்தப்பட வேண்டுமென்று இலங்கை வைத்தியர் சங்கம் அரசாங்கத்தை நிர்ப்பந்தித்தது. ஆனால், யாருமே பாதிக்கப்பட்ட சீனப் பெண்ணின் குலம், கோத்திரம், சமயம், இனம், மரபுகள்,; பழக்க வழக்கங்கள் பற்றி எதுவுமே பேசவில்லை. சீனர்களின் உணவுப் பழக்கவழக்கம் பற்றி பேச வேண்டாம் என்று சர்வதேச அளவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை அறிவியல் கவனத்திற் கொள்வதில்லை. 

2019 டிசம்பர் 31ம் திகதி ஹூபே மாகாணத்தில் வுஹான் நகரில் கொரோனா தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது; இதன் பரவும் வேகம் தீவிரமானது; கணிசமான உயிர்களை இது காவு கொள்ளும் என்றும் அது உலகை எச்சரித்தது. 

புதிய தேர்தலுக்கு நாள் குறிப்பதிலும் வரலாறு காணாத வெற்றியை வடிவமைப்பதிலும் சிறுபான்மையினர் கலவாத தூய அமைச்சரவையை உருவாக்குவதிலும் இலங்கை அரசின் கவனம் சிதறடிக்கப்பட்டிருந்தது. 18வது கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டபோது ஊர் முடக்கக் (லொக் டவுண்) கோரிக்கை வலுவடைந்தது. 18 பேருக்கு கொரோனா பீடித்தது என்பதற்காக யாராவது நாட்டை லொக் டவுண் செய்வார்களா என அரசாங்கம் அடங்க மறுத்தது. புத்திஜீவிகள், மருத்துவ சங்கங்கள், நடுநிலை ஊடகங்களின் அழுத்தம் குறைவடையவில்லை. சமூக வலைத்தளங்கள் மிகத் தீவிர பங்களிப்பை வழங்கின.

பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று அரசு அஞ்சியிருக்கலாம். திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்பட முடியாது போகலாம் என்பதனால் அரசாங்கம் தயங்கியது என்ற அரசியல் அர்த்தமும் இதற்கு உண்டு. இத்தனைக்கும் மத்தியில் கொழும்பில் பெரிய கல்லூரிகளுக்கிடையிலான கோலாகலமான கிரிக்கட் வருடாந்தப் போட்டிக்கு அரசு அனுமதி வழங்கியது. “போட்டியை நிறுத்துமாறு நான் கூறினேன். எனது ஆலோசனையை ஏற்பாட்டாளர்கள் கேட்கவில்லை” என்று ஜனாதிபதி கூறியது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். அப்போட்டியைப் பார்க்க ஆயிரக்கணக்கில் மக்கள் ஒன்றுகூடினர். அதில் பார்வையாளர்களாகச் சென்றவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட செய்தியையும் யாரும் மறக்கவில்லை.

ஸ்ரீபாத (சிவனொளிபாத மலை) புனித மலை ஏற்றத்திற்கு மக்களை அனுமதிக்க வேண்டாம் என்று ஸ்ரீபாத விகாரை பிரதம பிக்குவை அரசாங்கம் கேட்டபோது கொரோனாவுக்காகவெல்லாம் ஸ்ரீபாத புனித பயணத்தைத் தடைசெய்ய முடியாது என்று அரசாங்கத்தின் வேண்டுகோளைப் புறக்கணித்த செய்தியும் நினைவில் இருக்கிறது.

உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. விமான நிலையம் முடக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது முதலான விடயங்கள் பற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் மருத்துவ அமைப்புகளும் இந்த விடயத்தில் தீவிர ஆர்வம் காட்டிய அரசியல் சார்பற்றவர்களும் இன்னும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தப் பின்னணியில்தான் குறித்த சில தனியார் ஊடகங்களும் இனவாதத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வரும் குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் ஒரு சில பௌத்த குருமார்களும் கொரோனாவை முஸ்லிம்களின் தலையில் கட்டும் பெரும் பிரயத்தனங்களில் ஈடுபட்டனர். இனவாதக் கருத்துக்கள் வெளிப்படையாக வாரி இறைக்கப்பட்டன. அரசாங்கம் மௌனம் காத்தது.

அக்குறனை, அட்டுலுகமை, நாத்தாண்டிய (முஸ்லிம் கொரோனா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்) பிரதேசங்களில் முஸ்லிம்கள் பொறுப்பற்ற வகையில் நடந்துள்ளனர். நோயைப் பரப்பி உள்ளனர்.அதனால் சிங்கள புத்தாண்டை இழந்து விட்டோம் என்றும் முஸ்லிம்கள் மீது சிங்கள மக்களுக்கு வெறுப்பூட்டும் வகையிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. மிகப் பெருவாரியான சிங்கள மக்கள் பார்க்கும் தொலைக்காட்சி ஊடகங்களில் இவை (திட்டமிட்டு) முன்னெடுக்கப்படுகின்றது. இவர்களின் நிகழ்ச்சித் திட்டம் வேறு. கொரோனாவின் நிகழ்ச்சித் திட்டம் வேறு. வைத்தியர்கள், விஞ்ஞானிகள், நாட்டுப்பற்றுள்ளவர்கள், உலக சுகாதார நிறுவனத் தலைவர்கள் கூறும் வழிகளால் அன்றி கொரோனாவை வீழ்த்துவது சாத்தியமல்ல.

அதனால் இலங்கை போன்ற நாடுகள் சமூகத் தூரப்படுத்தல், வீட்டிலிருத்தல் என்பவற்றோடு இனங்களுக்கிடையில் ஒற்றுமையைப் பாதுகாத்தல் என்பனவற்றையும் இணைத்துத்தான் கொரோனா எதிர்ப்புத் திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *