கொரோனாவின் கிடுக்கிப் பிடிக்குள் உலக பொருளாதாரமும் அரசியலும்

எம்.ஐ.எம். நியாஸ்
(B.Sc {SEUSL}, MLRHRM {Col}, MDS {Col}, LLB {OUSL})
உதவி ஆணையாளர், உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

2019 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் சீனாவின் வுஹான் ( Wuhan ) பிரதேசம் கொரோனா வைரஸினால் ( Corona Virus COVID -19) முதன் முதலாக பாதிக்கப்பட்டதை அடுத்து இன்றுவரை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 200 நாடுகளுக்கு இந்த கொரோனா பரவியுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலியெடுத்து வரும் நிலையில் உலகமே செயலிழந்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு பிரதேசமும் ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு நாடும்… என்று முழு உலகமும் லொக் டவுன் ( Lock Down ) செய்யப்பட்டுள்ளன. இந்நேரத்தில் உலக வான் பரப்புக்களும் தரை மார்க்கமும் கடல் மார்க்கமும்; ஓய்வெடுக்கின்றது எனலாம்.
1ஆம், 2ஆம் உலக மகா யுத்தங்களின் பின்னர் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை, பொளாதார நெருக்கடி, பசி பட்டினி மற்றும் உயிரியிழப்பு போன்றவற்றை கொரோனா வைரஸ் மீண்டும் ஒரு முறை ஒவ்வொரு மனிதனுக்கும் ஞாபகப்படுத்தியுள்ளதுடன், இது 3ஆம் உலகப் போருக்கான நுண்ணுயிரியல் மூலமான தாக்குதலாக இருக்குமோ என அரசியல், சமூக, பொருளாதார அறிஞர்களால் சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது. அதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கம் உலக பொருளாதார வல்லரசு என்று மார்தட்டிக் கொண்ட அமெரிக்காவின் பலத்தை மட்டுமல்லாமல், ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கம் வகிக்கும் Veto Power கொண்ட இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் போன்ற பெரும் பொளாதார பலம் கொண்ட நாடுகளின் விஞ்ஞான, கைத்தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் அடைந்த அதீத வள்ர்ச்சிகளுக்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. மட்டுமன்றி, இது உலக பொருளாதாரத்தில் நாடுகளுக்கிடையில் ஒரு புதிய ஒழுங்கை ஏற்படுத்தப் போகின்றது என்பது பொருளாதார விற்பன்னர்களின் கருத்தாகும்.
கொரோனாவிலிருந்து மனித உயிரைப் பாதுகாக்க மருத்துவத்துக்கும் உணவுக்குமான போட்டியை உலகளாவிய ரீதியில் இவ் வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு நாடுகளுக்கிடையில் அரசியல், சமூக, பொருளாதார யுத்தமொன்றை உலகளவில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக எந்த நாடுகள் கொரோனாவிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான மருந்துகளையும் மக்களுக்குத் தேவையான உணவுகளையும் தனது கண்டுபிடிப்புக்கள் மூலம் வழங்குகின்றனவோ அந்த நாடுகள்தான் உலக பொருளாதாரத்தில் புதிய வல்லரசுகளாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும். இதன்போது வளர்ச்சி கண்ட நாடுகளுக்கிடையில் ஏற்படும் போட்டி புதிய உலக நாடுகளின் ஒழுங்கை ஏற்படுத்தும் என எண்ண வேண்டியுள்ளது.
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவினால் உருவாக்கப்பட்ட சைனா வைரஸ்தான் ( China Virus ) இந்தக் கொரோனா ( Corona Virus COVID -19) என்று குற்றம் சாட்டி வருகிறார். சீனா உலக நாடுகளை ஏமாற்றும் வகையில் இந்த கொரோனாவை ( Corona Virus COVID -19) Wuhan பிரதேசத்திற்குள் மட்டும் வைத்துக் கொண்டு தனது ஏனைய மாநிலங்கள் எதனையும் பாதிக்காத வகையில் செய்த தந்திரோபாயம் என்ற குற்றச்சாட்டுக்களும் பலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
வரி செலுத்தப்படாத வணிகத்தை நாட்டிற்குள் கொண்டுவர சீனா திட்டமிட்டது. இதனால் நாட்டை இழுத்து மூடி கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவதற்கு கொரோனா சீனாவின் கைங்கரியமாக இருந்திருக்கலாம் என பல விமர்சனங்கள் மேலெழுந்துள்ளன. 40.3% ஆன வரிசெலுத்தப்படாத சீனாவின் பணம் உலக நாடுகளில் காணப்படுகிறது என்பது ஆதாரபூர்வமான ஒன்றாகும். சீனா உலகம் முழுவதும் தனது நவீன காலனித்துவ முறையான பொருளாதார குடியேற்றவாதத்தின் கீழ் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளமை இதற்கு சான்றாகும்.
2019ஆம் ஆண்டில் அமெரிக்க பொருளாதாரத்தை எடுத்து நோக்குவோமாயின், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( GDP ) 21.44tn அமெரிக்க டொலர்களாகவும் அதேவேளை சீனாவின் பொருளாதாரத்தில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( GDP ) 27.31tn அமெரிக்க டொலர்களாகவும் அதேநேரம் 2015ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஏற்றுமதிப் பொருட்களில் 165n tn டொலர் பெறுமதியான பொருட்களை கொள்ளனவு செய்திருந்தது. இது ஐக்கிய அமெரிக்காவின் மொத்த ஏற்றுமதியில் 7.3% ஆக உள்ளது. இது ஐக்கிய அமெரிக்காவின் மொத்த பொருளாதாரத்தில் ஏறத்தாழ 1.0% வெளியீடாகும். சீனாவின் இந்த வளர்ச்சி உலகப் பொருளாதாரத்தில் முதலாவது கட்டத்தை எட்டியது. (Ranking The Richest Countries In The World By CALEB SILVER, Updated Mar 18, 2020)இதனிடையே ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரம் 2ஆம் நிலையிலும் ( U$D 22.0 Tn (ட்ரில்லியன் அமெரிக்க டொலர்) ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரம் 3ஆம் நிலையிலும் ( (U$D 20.5 Tn- ட்ரில்லியன் அமெரிக்க டொலர்) காணப்பட்டது. இதன்போது ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஒன்றிணைவு 2018 ஆண்டின் பிற்பாடு சீனாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இது 2020 வரை தொடர்ந்தால் சீனா உலகின் பொருளாதார ரீதியில் பின்தள்ளப்படலாம் என அரசியல், பொருளாதார ஆய்வாளர்கள் எதிர்வுகூறினர். (EU-China And US-China Trade; US International Trade Commission, On 1st Aug, 2019)
இதனையடுத்து சீனா தன் மீதான உலகத்தின் பொருளாதார ரீதியான கொள்கை தாக்குதல்களை தணிக்க வேண்டி இருந்தது. அதனால் சீனாவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் முதலீடு செய்யப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளை அங்கிருந்து வெளியேற்றிவிட வேண்டும்;. இதற்கான உபாயமாகவே கொரோனா வைரஸ் ( Corona Virus COVID – 19) உயிரியல் தாக்குதலாக இருக்குமோ எனவும் பலராலும் பலவிதமாக தற்போது விமர்சிக்கப்படுகிறது. (ET Prime Report , Pg 4/8 Updated: 29 Mar 2020; On Fox News US Senator Tom Cotton)

சீனாவில் தங்களது முதலீட்டை செய்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 35% – 40% இற்கும் இடைப்பட்ட முதலீடுகளை தற்போது இழந்துள்ளன. ஆனால், கொரோனா மூலம் முதன் முதலில் பாதிக்கப்பட்ட சீனாவின் பொருளாதாரம் தற்போது 94ம% இழப்புக்களை சரி செய்துள்ளதாக சீனாவிலிருந்து வரும் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.
COVID -19இன் தாக்கத்தில் இருந்து தம்மைப் பாதுகாக்க தற்போதுதான் உலக நாடுகள் ஆயத்தமாகின்ற அதேவேளை, உலக வல்லரசுகளுக்கு மரண பயத்தை உருவாக்கி தமது கொள்கை மற்றும் பொருளாதார ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட சீனா களத்தில் இறங்கியுள்ளதாக கருதப்படுகிறது. இதனால் சீனா உலக நாடுகளுக்கு கொரோனா நோய் தொடர்பான நிபுணத்துவம் மற்றும் உபகரணங்களை கோடிக் கணக்கில் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது. அதற்காக நாட்டில் கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கு அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்புக்களை வழங்கவும் தொடங்கி உள்ளது என அங்கிருந்து வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கொடிய நோய்களான எபோலா உட்பட பல கொடிய நோய்களுக்கான மருந்து உற்பத்திகளில் ஈடுபட அமெரிக்கா சார்பான நாடுகளுக்கே உலக சுகாதார நிறுவனம் ( WHO ) அங்கீகாரம் வழங்கியது. இதேவேளை, உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு சுகாதார மற்றும் இரசாயன மருந்து ஏற்றுமதியில் மட்டுப்படுத்தப்பட்ட அங்கீகாரமே வழங்கியிருந்தது. தற்போது கோரோனா வைரஸிற்கு ( Corona Virus COVID – 19) பின்னர் உலக சுகாதார நிறுவனம் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு புறமிருக்க, ஐ.நாவின் அறிக்கையின்படி கொரோனா வைரஸ் ( Corona Virus COVID – 19) தாக்கத்தினால் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக 500 மில்லியனுக்கும் அதிகமானோர் உணவுப் பற்றாக்குறையினாலும் மருந்துப் பொருட்களின் பற்றாக்குறையினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகமானோர் ஆசிய, ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தோராவர்.
மேலும், அமெரிக்காவில் 17 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளார்களதாகவும் இவர்கள் அனைவரும் அரச உதவிகளை எதிர்பார்த்து தங்களை பதிவு செய்துள்ளதாகவும் மேலும் 6.6 மில்லியன் மக்கள் தொழிலை இழந்துள்ளதுடன் அரச உதவிக்கு பதியப்படாதவர்களாகவும் உள்ளனர் என இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தற்போது அமெரிக்காவில் வேலையற்றோர் வீதம் 12% – 13% ஆகியுள்ளதுடன் இவ்வாறு வேலையிழந்த ஒவ்வொருவருக்கும் மாதாந்த கொடுப்பனவாக 600 அமெரிக்க டொலர்களை சில மாதங்களுக்கு வழங்குவதற்கு எண்ணியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நோயின் பரவல் தொடர்ந்தால் அமெரிக்காவில் வேலையற்றோர்களின் எண்ணிக்கை 25 மில்லியன் வரை அதிகரிக்கலாம் என ஐ.நாவின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( GDP ) 2020இல் (முழு ஆண்டுக்குமாக) 2% ஆல் குறைவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, பொருளாதார வளர்ச்சியில் 2ஆம் 3ஆம் நிலையில் உள்ள சீனாவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இவ்வாறான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.
சீனா தன்னுடைய பொருளாதார பின்னடைவை சரிசெய்ய தொடங்கினாலும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ( GDP ) 2% ஆன வீழ்ச்சியைக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ( GDP ) 3%- 4% ஆன வீழ்ச்சியைக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது என ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான பொருளாதார பின்னடைவினால் மேற்படி நாடுகளுடன் தொடர்பு வைத்துள்ள அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளும் பெரிதும் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் 2.7 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களை மீளச் செலுத்த முடியுமான படுகடனைக் கொண்டிருப்பதனால் இதனைச் செலுத்த தவறும் பட்சத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மிகவும் மோசமான பொருளாதார மந்த நிலைக்கு உள்ளாகும் என்பதோடு உலக பொருளாதாரமே பாரிய சரிவை சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலைமையை சமாளிக்க ஐ.நா. ஏனைய நிதி நிறுவனங்கள் உட்பட சில நாடுகளிடமிருந்தும் நிதி உதவி கோரியுள்ளது. இதன் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்திலிருந்தும் ( IMF ) ஏனைய வங்கிகளிடமிருந்தும் வளர்ச்சி அடைந்த நாடுகளிடமிருந்தும் நிதியை திரட்டுவதற்கு ஐ.நா எண்ணியுள்ளது. இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 1.0 ட்ரில்லியன் வரையான அமெரிக்க டொலரை கடன்களாகவும் ஏனைய கடன் வழங்கும் வங்கிகளிடமிருந்து 1.0 ரில்லியன் வரையான அமெரிக்க டொலரை கடன் மன்னிப்பாகவும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் நலன் கருதி ஐ.நா சபை கோறியுள்ளது. மேலும் 500 மில்லியன் வரையான அமெரிக்க டொலரை நிதி உதவியாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் சுகாதார நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஐ.நா சபை எதிர்பார்த்துள்ளது.
OPEC என்கின்ற பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளும் ரஷ்யாவும் மசகு எண்ணெய் உற்பத்தியின் அளவைக் குறைக்க எண்ணியுள்ளது. இதன் மூலம் நாளந்தம் உற்பத்தி செய்யும் மசகு எண்ணெயின் அளவில் 10% மே இனி  OPEC மற்றும் ரஷ்யாவின் பெற்றோலிய உற்பத்தியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நாடுகள் நாளொன்றுக்கு 10 மில்லியன் பரல்களே உற்பத்தி செய்ய எண்ணியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. பெற்றோலியத்துக்கான குறைந்துள்ள கேள்வி அதன் விலையை வீழ்ச்சி அடைய செய்துள்ளன. பெற்றோலிய ஏற்றுமதி நாடுளுக்கான வருமானம் குறைந்துள்ளது. இவ்வாறான நாடுகளினுடைய பொருட்கள் சேவைகளுக்கான கேள்விகள் குறைந்து கொண்டு செல்லும் போது நிவாரணங்களை வழங்க வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் பிரஸல்சில் 2020.04.12இல் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு உதவி வழங்குவதற்கு நிதியை ஒதுக்குவது தொடர்பான மாநாடு இழுபறியில் நிறைவு பெற்றதையடுத்து ஐரோப்பிய ஒன்றியமே உடைந்துவிடும் நிலையை தற்போது கொரோனா வைரஸ் ( Corona Virus COVID -19) உருவாக்கியுள்ளது. இவ் வைரசினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், ஜேர்மனி போன்ற நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதிகளவிலான நிதி உதவி கோரி நிற்கிறது. அதனைக் கொடுப்பதற்கு தவறுமாயின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிச் செல்வதாக இத்தாலி, ஸ்பெய்ன் போன்ற நாடுகள் எச்சரிக்கை விடுக்கும் பாணியில் தெரிவித்துள்ளன.
இத்தாலிக்கு உதவுவதற்காக சீனாவும் ரஷ்யாவும் வந்திருக்கும் சந்தர்ப்பத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள மற்ற நாடுகள் தனக்கு உதவ வேண்டும் என விடாப்பிடியாக நிற்கின்ற அதேவேளை, தனக்கு எதிர்ப்பார்க்கின்ற நிதி உதவி கிடைக்கா விட்டால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிச் செல்வதாக உறுதியுடன் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் 70%ஆன இத்தாலிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் கிறிஸ்டலினா இயோஜியானா அவர்கள் தற்போதுள்ள நிலை தொடர்பாக கருத்து வெளியிடும்போது, உலக நாடுகள் 1930இல் சந்தித்த அதே பொருளாதார மந்த நிலையை கொரோனா வைரஸினால் ( Corona Virus COVID -19) உலகம் சந்திக்கப் போகிறது எனவும் குறிப்பாக இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் இதன் மூலம் பாரிய அளவில் இம்மந்த நிலையை அனுபவிக்கப் போகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின நாணய மதிப்பிறக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற இந்த நிலைமை இதனை மேலும் ஊக்குவிக்கும் என்கிறார் அவர்.
உலக வர்த்தக அமைப்பின் (WTO) அறிக்கையின்படி கொரோனா வைரஸ் ( Corona Virus COVID -19) தொற்று உலக வர்த்தகத்தில் பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது. உலக வர்த்தகத்தின் 1/3 பகுதி இவ்வாறு விழ்ச்சி அடையும் என குறிப்பிடப்படுகிறது. உலக வர்த்தக அமைப்பின் பணிப்பாளர் நாயகம் Roberto Azevedo குறிப்பிடும்போது சர்வதேச வர்த்தகம் 2021ஆம் ஆண்டின் ஆரம்பத்திலாவது தனது பழைய நிலையை எட்ட வேண்டுமானால் நாடுகள் ஒன்றாக இணைந்து செயற்பட்டால் மாத்திரமே சாத்தியமாகும் என கூறினார். மேலும், பொருட்கள் வியாபாரம் உலகளவில் சுருங்கிவிடும் எனவும் இது கடந்த தசாப்த காலத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை விட கூடுதலாக தாக்கம் செலுத்தும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த வருடம் சர்வதேச வர்த்தகம் கொரோனா வைரஸினால் ( Corona Virus COVID -19) ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடி பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் திட பாரிய அளவில் பின்னடைவை சந்திக்கும் எனவும் அது 13% – 32% இற்கு இடைப்பட்ட செங்குத்து வீழ்சிசியை காட்டும் எனவும் உலக வர்த்தக அமைப்பின் ( WTO ) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009இல் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடியானது உலக வர்த்தகம் 12.5% இனால் வீழ்ச்சி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பாரிய மோசமான உலக வர்த்தகத்தின் மீதான அடியாகும் என உலக வர்த்தக அமைப்பின் பணிப்பாளர் நாயகம் Roberto Azevedo  தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கடந்த ஆண்டில் ஏற்பட்டிருந்த அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக பதட்டம் உலகளாவிய பொருட்கள் வர்த்தகத்தில் 0.1 தசம் ஒரு வீத சரிவிற்கு வழிவகுத்தன. தற்போது ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியும் மருந்துகளை உற்பத்தி செய்து வழங்குவதில் ஏற்பட்ட பற்றாக்குறையும் அதன் தேவை உலகளவில் ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கின்ற நிலையானது உலகத்தில் எந்த நாடும் பூரணமான தன்னிறைவைக் கொண்டிருக்கவில்லை என்பதையே புலப்படுத்துவதாக Roberto Azevedo  தெரிவித்துள்ளார். இதனால் பொருட்கள் சேவைகளினுடைய தொடர்ச்சியான வழங்கள் (விநியோக சங்கிலி) பன்முகப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
உலக நாடுகளினுடைய வினைத்திறன் வாய்ந்த கொள்கை உருவாக்கம் மற்றும் கொரோனா வைரஸின் ( Corona Virus COVID -19) பரவலடையும் கால அளவினைப் பொறுத்து 2021ஆம் ஆண்டின் உலகளாவிய பொருட்கள் சேவைகளினுடைய வியாபாரத்தில் மீள் எழுச்சியானது 21 வீதத்திற்கும் 24 வீதத்திற்குமிடையில் உள்ளதாக Roberto Azevedo  மேலும் தெரிவித்தார். இந்த வருடம் உலக நாடுகள் பெரும்பாலும் இரட்டை இலக்க சதவீதத்திலான வீழ்ச்சியை பொருட்கள் சேவைகளினுடைய வியாபாரத்தில் அனுபவிக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது. மேலும், வட அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளிலிருந்தான ஏற்றுமதிகள் பெரும் அடியை அனுபவிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Electronics மற்றும் Automobile உற்பத்தி துறைகள் செங்குத்தான வீழ்ச்சியை காட்டும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், சேவைகள் துறைகள் மீதான தாக்கம் பற்றிய எதிர்வுகூறல் உலக வர்த்தக அமைப்பின் அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை எனவும் போக்குவரத்து மற்றும் பயணத்தடையின் காரணமாக பொருட்களை கொண்டு செல்வதில் ஏற்படும் சிரமம் இந்நாடுகளின் வியாபார செயற்பாட்டை கடுமையாக பாதிக்கும் என்றே தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்து காணப்படும் பெற்றோலிய உற்பத்தியையும் குறைத்துள்ளது. பெற்றோலிய உற்பத்தியை சரியான முறையில் பொருளாதார ஏற்றுமதி- இறக்குமதிகளுடன் தொடர்புபடுத்தா விட்டால் விரைவான பொருளாதார மீட்சி சாத்தியமாகாது எனவும் ; Roberto Azevedo குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து புரிந்துணர்வு அடிப்படையில் வேலை செய்தால் மாத்திரமே விரைவான பொருளாதார மீட்சி சாத்தியமாகும் என்கிறார் அவர். இதன்போது நிதி வரியும் வியாபாரக் கொள்கைகளும் ஒரே திசையில் பயணிக்க வேண்டிய தேவை உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *