வரலாற்றில் இடம்பெற்ற பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளல்

விக்டர் ஐவன்
தமிழில்: ராஃபி சரிப்தீன்
இலங்கை தற்போது முகம்கொடுத்து வருகின்ற பிரச்சினைகளுக்கும் இலங்கையின் புராதண வரலாற்றுக்குமிடையே மிக நெருங்கிய தொடர்புகள் காணப்பகின்றன. நாட்டு மக்களின் எண்ணப்பாடுகளில் இலங்கையின் உண்மையான வரலாறு செலுத்தியிருக்கின்ற தாக்கத்தினை விட வரலாற்றுக்கு வழங்கபட்டிருக்கின்ற வரைவிலக்கணங்களினூடாக அதிக தாக்கங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இவ்வாறான விடயங்களைக் கருத்தில் கொண்டு இலங்கையின் வரலாற்றை முறையாக ஆராய்ந்து பார்க்க வேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டது. அதற்காக மேற்கொண்ட முயற்சியின் விளைவாக “ஸ்ரீ லங்கா: இதிஹாசயே சப்யதாவய” (இலங்கை வரலாற்றின் பரிணாமம்) என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
இலங்கையில் மக்கள் குடியிருப்புகள் உருவான காலப் பகுதி முதல் பிரித்தானிய ஆட்சிக் காலம் வரையிலான காலப்பகுதி தொடர்பான விடயங்களை அந்தப் புத்தகம் உள்ளடக்கியுள்ளது. குறித்த புத்தகமானது வரலாற்றுச் சம்பவங்களை வரிசைப்படுத்திய ஒரு வரலாற்றுத் தொகுப்பாகவன்றி வரலாற்றில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்தும் அவை தீர்க்கப்படுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்த தொகுப்பாக அமைந்திருக்கின்றது.
அதில் குறிப்பிட்டப்பட்டிருக்கின்ற பல சிக்கல்கள் தொடர்பிலான அவதானங்கள் தற்போதைய நம்பிக்கைகளுக்கு முரணானதாக அமைந்திருக்கலாம். வரலாறு குறித்து எழுதப்பட்டிருக்கின்ற ஏடுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற விடயங்களிலிருந்து இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மாற்றமானதாக அமைந்திருக்கலாம். அதில் நான் குறிப்பிட்டிருக்கின்ற விடயங்கள் எமது நாடு தற்போது முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் குறித்து புரிந்து கொள்வதற்கு உதவியாக அமையும் என்பதாக நம்புகின்றேன். இலங்கை வரலாற்றினை குடியிருப்புகள் உருவான காலப் பகுதி முதல் பிரித்தானிய ஆட்சிக் காலம் வரையான காலப் பகுதியை நவீன காலத்திற்கு முன்னைய காலம் என்பதாகவும் இலங்கை பிரித்தானியாவின் ஆதிக்க நாடாக மாறிய பின்னரான காலப் பகுதியை நவீன காலம் என்பாதகவும் இரண்டு பகுதிகளாக பிரித்து விடங்களைக் குறிப்பிட்டிருக்கின்றேன்.
இனங்களின் தோற்றம்
சிங்கள இனத்தின் ஆரம்பமாக குறிப்பிடுகின்ற விஜயன் தலைமையிலான குழு தற்செயலாக இந்த நாட்டை வந்தடைந்த காலப் பகுதிகளில் இந்த நாட்டில் குடியிருப்புகள் காணப்பட்டதாகவும் அந்தக் காலப் பகுதியில் வாழ்ந்த மக்கள் குறிப்பிட்டளவு வளர்ச்சி கண்ட நிலையிலான நாகரிகத்தினைப் பின்பற்றி வந்தாகவும் வரலாற்று சான்றுகள் மற்றும் தொல்பொருள் சான்றுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. விஜயன் இலங்கைக்கு வந்ததாகக் குறிப்பிடப்படுகின்ற காலத்திற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரான கி.மு. எட்டாம் நூற்றாண்டு காலப் பகுதிகளில் மட்பாண்டங்கள் பயன்படுத்துவதுடன் நெல் போன்ற தானியங்கள் பயிரிடுகின்ற அளவுக்கு வளர்ச்சி கண்ட நாகரிகமொன்றைக் கொண்ட மக்கள் இலங்கையில் வசித்திருக்கின்றார்கள் என்பதற்கான சான்றுகள் சிரான் தெரணியகல என்பவரால் அனுராதபுரம் மற்றும் கண்டி போன்ற பகுதிகளில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சி மூலமாக கணடறியப்பட்டிருக்கின்றது. சிலவேளை மஹாவம்சத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற அரக்கர் மற்றும் நாகர் இனத்தவர்கள் அந்தக் காலாத்ததில் வாழ்ந்தவர்களாக இருக்கலாம்.
விஜயனும் அவரது குழுவினதும் வருகை வட இந்தியாவிலிருந்து இடம்பெற்றிருப்பதுடன் மற்றைய இனத்தவர்கள் தென் இந்தியாவிருந்தே வருகை தந்திருக்க வேண்டும். இரும்பு தொடர்பான தொழில்நுட்பம் இந்தியாவிலிருந்தே எமக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றது. தென் இந்தியாவிலிருந்து இலங்கை வந்த மக்கள் ஊடாகவே இரும்புத் தொழில்நுட்பமானது இலங்கைக்கு வந்திருக்க வேண்டும். இரும்பு பயன்பாடு ஆரம்பிக்கப்பட்டது கி.மு. 950-800 காலப் பகுதி என்பதாக அனுராதபுர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் அடிப்படையில் நிரூபணமாகியுள்ளது.
மன்னார் குடாநாடு மற்றும் பாக்கு நீரினை என்பவற்றினால் இலங்கை இந்தியாவின் தெற்குப் பகுதியிலிருந்து பிரிந்து நிற்கின்றது. இரண்டு நாடுகளுக்குமிடையிலான இடைவெளி 20 மைல்களாகும். இந்த இரண்டு நாடுகளுகிடையே அமைந்திருக்கின்ற ராமர் பாலம் அல்லது ஆதம் பாலம் என்பதாக அழைக்கப்படுகின்ற கல்லாலான பாதை இயற்கையாக உருவான ஒன்றல்ல என்பதாகவும் அது இந்தியாவின் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று என்பதாகவும் அமெரிக்காவின் நாசா நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. அந்தக் காலப் பகுதியில் கடல் மட்டமானது இன்று இருப்பதைவிட தாழ்ந்த அமைப்பில் அமைந்திருந்து இந்தப் பாதையின் ஊடாக மக்கள் நடந்து பயணிக்க முடியுமான அடிப்படையில் இருந்திருக்க வேண்டும்.
நாகர், அரக்கர், இயக்கர், தேவர் ஆகிய இனத்தவர்கள் தென் இந்தியாவிலிருந்து வந்தவர்களாக குறிப்பிடலாம். வட இந்தியிலாவிருந்து விஜயனுடன் வருகை தந்தவர்களின் தொகை இலங்கையில் அன்றைய காலப்பகுதியில் வசித்து வந்த இனத்தவர்களின் தொகையிலும் குறைந்ததாக இருந்த போதிலும் அவர்களிடமிருந்த அதிகாரத்தின் காரணமாக இலங்கை வந்த பின்னர் இங்கு வாழ்ந்து வந்த இனத்தவர்களின் முதன்மை இனத்தவர்காளக மாறியிருக்கலாம். பின்னர் குறித்த முதன்மை இனத்தை அடிப்படையாகக் கொண்டு இனங்கள் ஒவ்வொன்றாக கலந்து சிங்களம் என்ற இனம் தோன்றியிருக்கலாம்.
மதங்களின் தோற்றம்
புராதன காலங்களில் ஒவ்வோர் இனத்துக்காகவும் தலைவர்கள் இருந்தபோதிலும் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் அடிப்படையில் தேசிய தலைவர்கள் இருந்ததாகத் தெரியவில்லை. அந்;தக் காலப் பகுதியில் மக்களிடம் வழிபடும் நடைமுறைகள் காணப்பட்டபோதிலும் மதம் என்ற எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. மேற்படி இரண்டு குறைகளையும் நிவர்த்தி செய்யும் அடிப்படையில் புத்த மதம் தோற்றம் பெற்றது என்பதாக குறிப்பிட வேண்டும். மதம் ஒன்று இல்லாமல் மக்களின்; மனதுகளில் குடிகொண்டிருந்த வெறுமையினை புத்த மதம் நீக்கி விட்டது என்பதாக குறிப்பிடலாம். அத்துடன் தேசிய தலைவர் இல்லாமல் இருந்த நாடு புத்த மதத்தின் விளைவாக அரசர் ஒருவரைப் பெற்றுக் கொண்டது. புத்த மதம் என்பது அரசரினதும் அரச குடும்பத்தினதும் மதமாக இருந்தமையினாலும் சிந்தனா ரீதியிலான மதமாக இருந்தமையினாலும் வேடர்கள் தவிர்ந்த மற்றைய அனைத்து இனத்தவர்களும் குறித்த மதத்தினை ஏற்றுக் கொண்டனர். சிங்களம் என்ற இனம் ஒன்றினை உருவாக்கியதும் மற்றும் அனைத்து இனங்களை ஒன்றுபடுத்தியதுமான மார்க்கமாக புத்த மதம் செயற்படிருக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து இலங்கையானது அதிக மக்கள் ஒரே மதத்தைப் பின்பற்றுகின்ற நாடாக மாற்றம் கண்டிருக்க வேண்டும். தென் இந்தியாவிலிருந்து இலங்கை வந்தவர்கள்கூட பௌத்த மதத்தைத் தழுவிக் கொண்டு சிங்களவர்களாக தங்களை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். நாட்டின் அரசர்கள்கூட ஒரு மதத்தையும் ஒரே இன மத்தையும் சார்ந்த அடிப்படையிலேயே இருந்திருக்க வேண்டும்.
அதன் பின்னரான காலப் பகுதிகளில் பல காரணங்களுக்காக தென் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகின்றவர்களின் தொகை அதிகரித்து அவ்வாறு வந்தவர்கள் தாம் பின்பற்றிவந்த இந்து மதத்தை துறந்து விடாமலும் பௌத்த மதத்தினை ஏற்று சிங்களவர்களாக மாறிவிடாமலும் தாம் அதுவரை காலமும் பின்பற்றி வந்த கொள்கைகளை அவ்வாறே பின்பற்றி வந்தமையினால் சிங்கள பௌத்தர்கள் என்ற அனைவருக்கு மேலதிகமாக தமிழ் பேசுகின்ற இந்துக்கள் உருவாகியிருக்கலாம். இந்த மாற்றமானது ஆரம்ப காலங்களில் அரசர்களுக்கும் பௌத்த பிக்குமார்களுக்கும் ஒரு பிரச்சினையாக இருந்திருக்க வேண்டும். சிங்களவரோ பௌத்த மதத்தை பின்பற்றுபவரோ அல்லாத எள்ளாலன் ஆட்சியமைத்து நீண்ட காலம் நாட்டை ஆட்சி செய்யும்போது இந்தப் பிரச்சினை பேசுபொருளாக மாறியிருக்க வேண்டும்.
தேவநம்பியதிஸ்ஸ மன்னரின் ஆட்சிக் காலம் முடிவடைந்து சில காலங்கள் கடந்த பின்னரே இந்த நிலை உருவாகியிருந்தது. அதன் காரணமாக இலங்கையின் வடக்குப் பகுதியின்; உரிமை அரச குடும்பத்திற்கு இல்லாமலாகி அரசாட்சிக்கான முதன்மை இனம் என்ற நிலைகூட இல்லாமலாவதற்கு காரணமாக அமைந்தது. இது தொடர்பில் அரசர்களிடம் காணப்பட்ட அதிருப்தியினைப் போன்றே பிக்குகள் மத்தியிலும் அதே வகையிலான அதிருப்தி காணப்பட்டதாக தெரிகின்றது. எல்லாளன் பௌத்த எதிர்ப்பாளராக இருக்கவில்லை என்றபோதிலும் சிங்கள அரசர்களிடமிருந்து கிடைத்த உபசாரங்களும் வரவேற்புகளும்; எல்லாளனிடமிருந்து பிக்குகளுக்கு கிடைக்காமலிருந்திக்கக் கூடும். எல்லாளன் என்பவர் சிறந்த ஆட்சியாளராக இருந்தபோதிலும் அவரது இருப்பு பிக்குகளைப் பெறுத்தவரையில் பிரச்சினையாக அமைந்திருக்கலாம். பிள்ளைப்; பாசத்தையும் மிகைக்கின்ற அளவில்; நீதியினை மதிக்கின்ற ஒருவராகவே எல்லாளனை மஹாவம்சம் சித்திரிக்கின்றது. அவ்வாறான அரசர் ஒருவரை தோல்வியடையச் செய்ய வேண்டுமாயின் அவருக்கு எதிரான யுத்தத்தினை பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கான யுத்தமாக மக்களுக்கு அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்பதாக மேற்படி இரண்டு தரப்பினரும் கருதியிருக்க வேண்டும். அந்த அடிப்படையில் இரண்டு பிரிவினரும் யுத்தத்தினை நடத்தி வெற்றி கொண்டனர்.
1ஆம் விஜயபாகு, 3ஆம் விஜயபாகு
வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக மேற்கொண்ட யுத்தங்களின்போது துட்டுகைமுனு புத்த மதத்தினை ஆயுதமாகப் பயன்படுத்தியது போன்று அதன் பின்னர் வந்த எந்த அரசரும் பயன்படுத்தியிருக்க முடியாது என்பதாகக் குறிப்பிட வேண்டும். அன்றைய மக்கள் சமூகமானது இரட்டை மார்க்கம், இரட்டை இனம் என்ற அடிப்படையில் மாற்றம் கண்டதன் பின்னர் அரசர்களும் இரட்டை மத இரட்டை இன அரசர்களாக மாறிவிட்டனர்.
அதிகாரத்தில் இருந்த பலமான வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போராடி வெற்றி கொண்டு நாட்டை ஒருமுகப்படுத்திய அரசர்கள் வரிசையில் துட்டுகைமுனுவுக்கு அடுத்ததாக முதலாவது விஜயபாகு எனும் அரசனைக் குறிப்பிடலாம். இந்த அரசனுக்கு போர் புரிய வேண்டியிருந்தது எல்லாளன் போன்ற ஒரு நீதமான அரசனுடனல்ல. மாறாக 77 வருட காலங்கள் வரை அதிகாரத்திலிருந்து பௌத்த விகாரைகளுக்கு பாரிய சேதம் ஏற்படுத்திய சோழ ஆட்சியாளர்களுக்கு எதிராகவாகும். எனினும், அந்த யுத்தத்தினை மத ரீதியான யுத்தமொன்றாக விஜயபாகு அரசர் ஆக்கிக் கொள்ளவில்லை. 1ஆம் விஜயபாகு அரசரின் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசர்களில் வெளிநாட்டு ஆதிக்க ஆட்சிகளுக்கு எதிராக போராடி நாட்டை ஒருமைப்படுத்திய அரசராக இரண்டாம் பராக்கிரமபாகு அரசனைக் குறிப்பிடலாம். இலங்கையை ஆக்கிரமித்த அனைவரிலும் மிகக் கொடூரமானவனும் பௌத்த மதத்துக்கு எதிரானவனுமாக கருதப்படும் காலிங்க மாகன் என்பவனுக்கு எதிராகவே இந்தப் போராட்டம் அமைந்திருந்தது. காலிங்க மாகனுக்கு எதிரான யுத்தமானது மதத்தினை முன்னிறுத்திய யுத்தமொன்றாக பிரகடணப்படுத்தப்படவில்லை. இந்த இரண்டு அரசர்கள் போலவே 1ஆம் பராக்கிரமபாகு அரசன் ஆறாவது பராக்கிரமபாகு அரசன் ஆகிய அரசர்கள் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாத்தவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். மேற்குறிப்பிட்ட நான்கு அரசர்களுமே புத்த மதத்தின் நலன்களுக்க விகாரைகளை அமைத்திருக்கின்றனர். இந்து மதத்தின் நலன்களுக்காக இந்துக் கோவில்களையும் அமைத்திருக்கின்றனர். பௌத்த விகாரைகளின் இருப்பை பாதுகாப்பதற்காக காணிகள் வழங்கியது போன்றே கோயில்களைப் பாதுகாப்பதற்கும் காணிகள் வழங்கியிருக்கின்றனர். எப்படியாயினும் துட்டகைமுனு அரசனின் பின்னர் வந்த இலங்கையின் அரசர்களில் அதிகமானோர் கூடிக் குறைந்த அளவுகளில் இரண்டு மதங்களைப் பின்பற்றுபவர்களாகவே இருந்திருக்கின்றனர்.
அரசர்கள் பின்பற்றிய இந்த இரட்டை மதக் கொள்கைகளுக்கு அமைய மத வழிபாட்டுத்தலங்களின் அமைப்புகளும் மாற்றம் பெற்றன. மக்களின் வழிபாட்டு முறைகளும் அதற்கு ஏற்ற வகையில் மாற்றம் கண்டன. பௌத்த விகாரையின் நிலப்பரப்புக்குள் இந்து மதம் சார்ந்த சிவன், வி~;னு கடவுள்களை வழிபடுவதற்காக சிலைகளுடன் தேவாலயங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சிங்கள பௌத்தர்கள் மும்மணிகளுக்கும் அஞ்சலி செலுத்திய அதே நேரம் இந்து தெய்வங்களினதும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டனர். பௌத்த பிக்குகளும் தேவாலயங்களுக்குச் சென்று அரசருக்கு பிரித் பாராயணம் செய்து வழிபாடுகள் நடத்தினர்.
தென் இந்திய ஆக்கிரமிப்பு
தென் இந்தியாவில் ஏதாவது ஓர் அரசு பலம் பொருந்தியதாக அமைந்து அங்கிருக்கின்ற இன்னுமொரு இராச்சியத்;தை ஆக்கிரமித்து தனது பலத்தினை அதிகரித்துக் கொள்வதுண்டு. இலங்கையானது இந்தியாவின் தென் பகுதி எல்லையிலிருந்து 20 மைல்கள் தொலைவிலே அமைந்திருப்பதன் காரணமாக இவ்வாறு ஆக்கிரமிக்கின்ற ஆட்சியாளர்கள் இலங்கையையும் தனது அதிகாரத்துக்குள் ஆக்கிரமித்துக் கொள்வதனை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்தக் காலகட்டத்தில் நாடுகளை ஆக்கிரமிப்பது என்பது முறையற்றதொரு செயலாகவன்றி ஒரு அரசுக்கு பெருமை தேடித்தருகின்ற ஒன்றாகவே கருதப்பட்டது. இலங்கை சிறிய ஒரு நாடாக இருந்த போதிலும் சந்தர்ப்பங்கள் சாதகமாக அமைகின்ற வேளைகளில் இந்தியாவின் ஒரு பகுதியையும் ஆக்கிரமித்துக் கொள்வதற்காக முயற்சித்து வெற்றியும் கண்;டிருக்கின்றனர். இரண்டாவது சேன (853-887) முதலாவது பராக்கிரமபாகு (1153-1186), நிஸ்ஸங்கமல்ல (1187-1196) ஆகிய அரசர்கள் இவ்வாறு இந்தியாவின் பகுதிகளை ஆக்கிரமித்து ஆடசியமைத்தவர்களாகக் குறிப்பிடலாம்.
தென் இந்தியாவின் ஆக்கிரமிப்புக்களின்போது விகாரைகள் கொள்ளையிடப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏராளமாக காணப்பட்டாலும் அவ்வாறு கொள்ளையிடப்பட்டது பௌத்தத்தினை எதிர்த்து நிற்க வேண்டும் என்ற காரணத்தினால் அல்ல என்பதுடன் சொத்துக்களை உடமையாக்கிக் கொள்வதற்காகவே இவ்வாறான கொள்ளையிடல் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அரசாங்கத்தின் கருவூலங்களில் செல்வம் குறைந்து செல்கின்ற வேளைகளில் செல்வச் செழிப்பான விகாரைகளைக் கொள்ளையிட்ட மன்னர்களும் இருந்திருக்கின்றனர். முதலாவது தடோபதீசன் 2வது கஸ்ஸப, 1வது விக்ரமபாகு போன்றவர்களை இதற்கான உதாரணமாகக் குறிப்பிடலாம்.
தென் இந்தியாவுடனான இலங்கையின் பௌத்த தொடர்புகள்
தென் இந்தியா மூலமாக இலங்கை அவ்வப்போது ஆக்கிரமிக்கப்படுவதுடன் அதற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்கின்ற அதேவேளை தென் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பலமானதொரு பௌத்த மத ரீதியிலான தொடர்பு காணப்பட்டு வந்திருக்கின்றது. வட்டகாமிணி அரசனின் ஆட்சிக் காலாத்தின்போது இலங்கையில் பிக்குகள் முறையற்ற விதத்தில் நடத்தப்பட்டபோது பிக்குகள் தென் இந்தியாவை நோக்கியே அடைக்கலம் தேடிச் சென்றிருக்கின்றனர். காலிங்க மாகனின் வன்முறைக் காலங்களில் சில பிக்குகள் ருகுணு பகுதிக்கும் மாயா பகுதிக்கும் தப்பியோட முன்னணி பிக்குகள் சிலர் தென் இந்தியாவை நோக்கி தப்பிச் சென்றிருக்கின்றனர்.
இலங்கையில் அட்டுவா எனும் கிரந்தங்களை எழுதிய புத்தகோச, புத்தத்த, தம்மபால ஆகியோர் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் தென் இந்தியர்களாவர். சாசனம் தொடர்பான பணிகளுக்குப் பொருத்தமான பிக்குகள் இலங்கையில் இல்லாதபோது தென் இந்தியாவிலிருந்து பிக்குகள் அரசர்களால் அழைத்து வரப்பட்டனர். 2ஆம் பராக்கிரமபாகு சோழ தேசத்திற்கு பரிசுப் பொருட்களை வழங்கி தர்ம கீர்த்தி மும்மணியினை இலங்கைக்கு கொண்டு வந்ததாக சூழவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்காவது பராக்கிரமபாகு சோழ நாட்டின் தேரர் ஒருவரை அழைத்து வந்து அரச குரு பதவி வழங்கியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தென் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பானது இலங்கையின் பௌத்த சிங்கள உறவுகளுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இன பேதம்;, மத பேதம் என்பன நவீன காலங்களில் உருவானவையாகும். அந்தக் காலங்களில் இவை இருக்கவில்லை. ஆனால் சாதி பேதங்கள் காணப்பட்டன.
புராதன காலத்தின் அபிமானம்
சிங்கள தலைநகரம் ராசரட்டை பகுதியில் அமைந்திருந்த காலப் பகுதியை (பதிமூன்றாம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதி வரை) சிங்கள கலாசாரத்தின் பொற்காலமாக கருத முடியும். அனுராதபுரம், சீகிரியா, பொலன்னறுவ போன்ற நகரங்கள் இந்தக் காலப் பகுதியிலேயே உருவானது. ருவன்வெலிசாய, அபயகிரி, ஜேதவனராம, ரத்கொன் போன்ற பாரிய தூபிகள், சிலைகள், கல்லாலான புத்தர் சிலைகள் என்பன இந்தக் காலப் பகுதியிலேயே உருவாக்கப்பட்டன. பொறியியல் திறன்களை மாத்திரமன்றி கலைத் திறன்களை வெளிப்படுத்துகின்ற அமைப்பிலான சீகிரிய அமைக்கப்பட்டதும் இந்த காலப் பகுதியிலாகும். கலாவாவி, மின்னேரிய வாவி, பராக்கிரம சமுத்திரம் போன்றன அமைக்கப்பட்டதும் இந்தக் காலப் பகுதியிலாகும். இந்தக் காலப் பகுதியில் சிறந்த நாகரிகம் ஒன்று இருந்திருக்கின்றது என்பதில் பெருமிதம் அடைவதில் தவறுகள் எதுவும் இருக்க முடியாது. எனினும், இந்த நாகரிகமானது சிறிய அளவுகளிலேனும் மிகைப்படுத்தப்படாத விதத்தில் நோக்கப்பட வேண்டும். எனினும், எம்மவர்கள் மத்தியில் மேற்படி விடயங்கள் தொடர்பாக மிகைப்படுத்தப்பட்ட கணிப்பீடுகளே காணப்படுகின்றன. அனாகரிக்க தர்மபால போன்ற தலைவர்களினால் மேற்படி காலப் பகுதி தொடர்பாக மிகைப்படுத்தப்பட்ட வரைவிலக்கணங்கள் வழங்கப்பட்டமை இந்த நிலைகளுக்கு காரணமாகும். உலகில் இருந்த நாகரிகங்களில் உன்னதமானதொரு நாகரிகமாகவே தர்மபால இந்தக் காலப் பகுதியினை அடையாளப்படுத்தியுள்ளார். எமது வரலாற்றாசிரியர்கள் மூலமாக இந்தத் தவறுகள் சரி செய்வதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
உலகின் சிறந்த 10 புராதண நாகரிகங்களின் பட்டியலில் இலங்கை அடக்கப்படவில்லை. இலங்கையை விட சிறந்த நாகரிகங்கள் உலகில் இருந்ததே இதற்கான காரணமாகும். அந்த நாகரிகங்கள் புதிய படிப்பினைகளை உலகுக்கு வழங்குவதாக இருந்திருப்பதுடன் இலங்கை அவ்வாறான நிலையில் இல்லாமலிருந்திருக்கின்றது.
குறித்த காலப் பகுதிகளில் இலங்கையில் குறிப்பிடத்தக்க அளவில் புத்தகங்கள் எழுதப்பட்டபோதிலும் அவற்றில் பெரும்பாலானவை புத்த மதம் குறித்து எழுதப்பட்ட புத்தகங்களாகவே காணப்படுகின்றன. கணிதம், தத்துவம், வாழ்வியல், உலக நியதிகள்… என்பன குறித்து புத்தகங்கள் எதுவும் எழுதப்படவில்லை. புத்த பெருமான் குறித்து மாத்திரமே எழுதப்பட்டிருப்பதுடன் அந்தக் காலப் பகுதியில் வாழ்ந்த சோக்ரடிஸ், பிளேட்டோ, யுக்லீட், ஆகிமிடிஸ், அரிஸ்டோடில் போன்ற தத்துவ ஞானிகளில் ஒருவர் குறித்துக்கூட இலங்கை அறிந்திருக்கவில்லை. இலங்கையின் சிந்தனைப் பரப்பு குறுகியதாக இருந்திருக்கின்றது என்பதை இதனூடாக புரிந்து கொள்ளலாம்.
வரலாற்றைப் பதிவு செய்தலும் பிக்குகளும்
சிந்தனைப் பரப்பு குறுகியதாக இருந்தபோதிலும் தொடரான வரலாற்றுப் பதிவுகள் பாதுகாக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகின்ற ஆசிய நாடுகளின் வரிசையில் சீனாவுக்கு அடுத்த இடத்தை இலங்கை பெறுகின்றது. இலங்கையின் வரலாறு குறித்து எழுதப்பட்ட நூலாக கருதப்படுகின்ற மாகாவம்சத்தில் தேவநம்பிய தீசன் (கி.மு. 250- 210) ஆட்சிக் காலம் வரையிலான காலப் பகுதி தொடர்பிலான பதிவுகள்; ஏற்றுக் கொள்ள முடியாத அடிப்படையிலான தகவல்களை உள்ளடக்கியுள்ளபோதிலும் அதன் பின்னரான காலப் பகுதி குறித்த விடயங்களில் பெரும்பாலானவை ஏற்றுக்கொள்ள முடியுமான நிலையில் இருக்கின்றது. மகாவம்சமானது மகாவிகாரையின் வரலாற்றினைக் குறிப்பிடுகின்ற மத ரீதியிலாக எழுதப்பட்ட புத்தகமென்ற போதிலும் அது இலங்கையின் வரலாற்றைக் குறிப்பிடுகின்ற புத்தகமாக குறிப்பிடப்படுகின்றது. அந்த அடிப்படையிலாயினும் இலங்கையின் வரலாற்றைத் தொகுத்து நூலாக உருவாக்கிய பெருமை மகா விகாரையின் பிக்குகளைச் சாருகின்றது.
முன்னைய காலங்களில் பிக்குகள் என்போர் அரசனுக்கு அடுத்ததாக பலம்; பொருந்தியவர்களாக காணப்பட்டனர். எனினும், துட்டகைமுனுவுக்குப் பின்னரான காலப் பகுதிகளில் அரசர்களை இயக்குகின்ற பலம் பிக்குகளிடம் இருக்கவில்லை. பிக்குகள் தமக்கிருந்த அதிகாரங்களை சில சந்தர்ப்பங்களில் முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதானது பல அரசர்கள் புத்த மதத்துடன் இணைத்து இன்னுமொரு மதத்தினையும் பின்பற்றுவதற்கு காரணமாக அமைந்திருக்கலாம். எனினும், அரசர்கள் பிக்குகள் ஊடாகவே சிங்கள பௌத்தர்களின் ஆதரவினைப் பெற்றுக் கொண்டுள்ளனர். அதற்காக அரசர்கள் பிக்குகளுக்கு போதுமானளவில் சலுகைகள் வழங்கியிருந்த போதிலும் துட்டகைமுனு அரசனுக்குப் பின்னரான காலப் பகுதியில் தீர்மானங்கள் எடுப்பதற்கான நடவடிக்கைகளின்போது பிக்குகளில் தங்கியிருக்கவில்லை என்பது தெளிவாகின்றது.
பிக்குகளை தர்மத்திற்கும் ஒழுக்க விழுமியங்களுக்கும் உட்பட்ட அடிப்படையில் வைத்துக் கொள்வதற்கான பொறுப்பு அரசர்களைச் சார்ந்திருந்தது. இது நாட்டை ஆட்சி செய்வதைவிட சிரமமான காரியமாக இருந்திருக்கின்றது. வெறுக்கத்தக்க செயற்பாடுகளை மேற்கொள்பவர்கள் பிக்குகளாக வேடம் தரித்திருந்தமை குறித்து “தீபவம்சத்தில்” குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சிலர் தர்மத்தைப் பாதுகாக்கும் நோக்கிலன்றி செல்வம் ஈட்டும் நோக்கில் பிக்குகளானவர்களும் இருக்கின்றனர் என்பதை இதனூடாக புரிந்து கொள்ள முடிகின்றது.
பிக்குகளுக்கு தண்டனை வழங்குதல்
ஆரம்ப காலங்களில் பிக்குகளாக வாழ்வது சாதாரண மக்கள் வாழ்கின்ற வாழ்க்கையை விட சிரமமானதாக இருந்திருக்கின்றது. கற்குகைகளிலேயே பிக்குகள் வாழ்ந்திருக்கின்றனர். பிச்சைப் பாத்திரமேந்தி மக்களிடம் சென்றே உணவு பெற்றிருக்கின்றனர். காலம் செல்லச் செல்ல விகாரைகளின் இருப்பினைப் பாதுகாப்பதற்காக காணிகளையும் சொத்துக்களையும் வழங்கியதன் காரணமாக விகாரைகள் சொத்துக்கள் நிறைந்த நிறுவனங்களாக மாற்றம் பெற்றன. இதன் விளைவாக பிக்குகள் மக்களில் தங்கி வாழ்கின்ற நிலை மாற்றமடைந்து மக்கள் விகாரைகளில் தங்கி வாழும் நிலை ஏற்பட்டது. அத்துடன் பிக்கு எனும் வாழ்க்கை துயர்களற்ற சொகுசான வாழ்கையாக மாற்றம் பெற்றது.
கொடகம் வாஜிஸ்வர தேரரின் கூற்றுக்கு அமைய 15ஆம் நூற்றாண்டாகும்போது பிக்குகளின் நடைமுறைகளில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. பிக்குகள் பெண்களினூடாக உணவு சமைத்து தட்டுகளில் உணவருந்தியிருக்கின்றனர். உணவுக்காக பிக்குகள் பிச்சைப் பாத்திரம் ஏந்தி மக்களிடம் செல்வதை நிறுத்திக் கொண்டதன் விளைவாக பிக்குகளின் உணவுப் பிச்சை என்றால் என்ன என்பதே தெரியாத நிலை பௌத்தர்களுக்கு ஏற்பட்டது. அந்தக் காலங்களில் பிக்குகள் சொத்துகளைப் பராமரித்து அதிலிருந்து வருகின்ற வருமானங்களை தனது குடும்பத்தவர் சகிதம் அனுபவித்தனர்.
அவ்வப்போது அரசர்களால் தீய நடத்தையுள்ள பிக்குகள் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சாசனத்திலிருந்து நீக்கப்பட்டாலும் அது தற்காலிக தீர்வுகளாகவே இருந்ததே தவிர நிரந்தரமான தீர்வாக அது இருக்வில்லை.
சில பிக்குகளினது இது போன்ற நடவடிக்கைகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு அரசர்களை உள்ளாக்குவதாக அமைந்திருக்கின்றன. கதிராஜன் திஸ்ஸ அரசன் (கி.மு. 31- 34) பிக்குகள் 60 பேர்களை ஒன்றாக பிணைத்து மிகிந்தலையின் உயர்ந்த கற்பாறையின் மீதிருந்து தள்ளி விடுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. கோத்தாபய மன்னன் (கி.பி. 233- 266) 60 பிக்குகளை நாடு கடத்தியிருக்கின்றார்.
மின்னேரியின் கடவுள் என அழைக்கப்படுகின்றன மன்னன் மாகாசேனன் மகா விகாரையின் பிக்குகளை பாவிகள் என்றார். குறித்த விகாரையில் இருப்பவர்களுக்கு தாணம் வழங்குவதிலிருந்தும் தவிர்ந்து கொண்டார். தொடராக மூன்று நாட்கள் பிச்சைப் பாத்திரம் ஏந்தி மக்களிடம் சென்றும் உணவு கிடைக்காத காரணத்தினால் மகாவிகாரையின் பிக்குகளுக்கு அனுராதபுரத்திலிருந்து ருஹ{னு அல்லது மலல தேசங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சீலாம்பே கவத்த அரசன் (619-628) காலத்தில் பிக்குகள் சிலரின் கைகள் வெட்டப்பட்டன. மேலும் பிக்குகள் 100 பேர் நாடு கடத்தப்பட்டனர்.
நவீன காலத்துக்கு முன்னைய புராதண காலப்பகுதியில் இன பேதங்கள் இருந்த போதிலும் இன மத ரீதியிலான வேறுபாடுகளோ மோதல்களோ இருக்கவில்லை. எனினும் பிக்குகளின் இரண்டு குழுக்களுக்கு இடையே தொடராக பிணக்கு இருந்து வந்திருப்பதுடன் குறித்த பிணக்குகளின்போது உயிரிழப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் அரசர்களுக்கும் பிக்குகளுக்கு இடையிலும் சண்டைகள் ஏற்பட்டிருக்கின்றது. அந்தச் சண்டைகளிலும் உயிரிழப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றன.

விக்டர் ஐவனின் முகநூலில் இருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *