கொரோனா: உளவியல் தாக்கங்களும் அது தொடர்பான புரிதல்களும்

கலாநிதி பைறோஸ் முஸ்தபா

இன்று உலகமே கோவிட்- 19 ( Covid – 19 ) தொற்று நோயால் துன்பகரமானதும் இக்கட்டானதுமான ஒரு நிலையை எதிர்கொண்டுள்ளது. இத்தொற்று நோய் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் முகமாக 200க்கு மேற்பட்ட நாடுகளிலுள்ள பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் அரச, தனியார் நிறுவனங்களும் தமது செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளன. சுகாதார துறையினர் மக்களை வெளியில் செல்லாது வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலைமை சில நாடுகளில் பல மாதங்களாக நீடிக்கின்றது. இதனால் விடுமுறை கிடைத்தும் வீட்டிற்குள் இருக்கின்ற நிலை பலருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் ஒரேயடியாக வீட்டிலேயே இருப்பதற்கு நிர்பந்திக்கப்படுவதால் இந்நிலை ஏற்படுகின்றது. கடந்த பல தசாப்தங்களாக உலக வரலாற்றில் இவ்வாறான ஒரு நிலைமை ஏற்படாததால் நாங்கள் இதனை புதிய அனுபவமாக எடுக்க வேண்டியுள்ளது. எமது நாட்டிலும் சில மாவட்டங்கள் மூடப்பட்டு ( Lock down ) மக்கள் முழுமையாக வீட்டினுள்ளே தனிமைப்பட்டு இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், எம்மில் பலர் மன உளைச்சல் போன்ற பல்வேறு உளவியல் பிரச்சினைகளுக்கு உட்பட்டிருக்கின்றனர்.

எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையை நாங்கள் எவ்வாறு நோக்குகின்றோம், எங்களுடைய புலக்காட்சி ( Perception ) எவ்வாறு அமைகின்றது என்பதைப் பொறுத்தே அதன் விளைவு அமையும். நாங்கள் அதிகமான நேரங்களில் வீட்டினுள் அடைபட்டுக் கிடக்கிறோம் என்று இதனை ஒரு கடினமான விடயமாக நோக்கினால் இது எங்களுக்கு சிரமமாகவே அமையும். மாற்றமாக இதனை நாங்கள் “வீட்டில் பாதுகாப்பாக இருக்கின்றோம்” ( We are very safe at home ) என்று சாதகமாக ( Positive ) எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு நாளும் புத்துணர்வான ஆரம்பமாக அமையும்.

ஆகவே, மனிதர்கள் எதிர்கொள்ளும் நெருக்கீடு ( Stress ) என்பது பொதுவானதுதான். ஆனால், அதனை ஒவ்வொரு நபரும் எவ்வாறு பார்க்கின்றார்கள் என்பதைப் பொறுத்து அதன் தாக்கம் காணப்படும். ஒரு சிலருக்கு இது ஒரு பெரிய சவாலாக இருக்கும். பலர் இதனை சாதாரணமாகவே எதிர்கொள்வர். இதனை கார்ல் யூங் ( Carl Jung) ) என்ற உளவியலாளரின் ஆளுமை தொடர்பான கருத்துக்களுடன் பொருத்திப் பார்க்க முடியும். இவர் மனிதர்களை அகமுகி ( Introvert ) மற்றும் புறமுகி ( Extrovert ) என இரு வகையாக பிரித்து நோக்குகின்றார். இவர்களில் புறமுகி ஆளுமையினை உடைவர்கள் அதிகமாக சமூகமயமாக்கத்திற்கு உட்பட்டவர்களாகவும் சகஜமாக எல்லோரிடமும் பழகுபவர்களாகவும் கவலையின்மை, பிறருடன் செயலாற்ற விருப்பம் மற்றும் நகைச்சுவையாக இருப்பவர்களாகவும் காணப்படுவர். இவர்கள் ஒரே இடத்தில் அதிக நேரம் இருக்க மாட்டார்கள். அடுத்ததாக, அகமுகி ஆளுமையுடையவர்கள் இதற்கு எதிர்மறையான சுபாவம் கொண்டவர்களாக காணப்படுவர். இவர்கள் கதைப்பது குறைவு. தனிமை மற்றும் தானும் தனது வேலையும் என்று இருப்பார்கள். இவர்களுக்கு இந்தச் சூழ்நிலை சிரமமாக இருக்க மாட்டாது. அவர்கள் வீட்டிலிருந்து கொண்டு வேலைகளைச் செய்து கொண்டிருப்பார்கள். எனவே, புறமுகி சுபாவம் கொண்டவர்களே இச்சூழ்நிலையில் அதிகம் பாதிக்கப்படுவார்கள். நாட்டின் சட்ட ஒழுங்குகளை மீறியமைக்காக தண்டிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் இப்பிரிவினரேயாகும். இவ் ஆளுமையுடையவர்கள் அவர்களின் இயல்பு தொடர்பாக விழிப்புணர்வு பெறுவதோடு இச்சந்தர்ப்பத்தில் எவ்வாறு ஆக்கபூர்வமாக தனது நேரங்களை செலவு செய்வது என்பது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமானதாகும்.

இன்று உலகில் இத்தொற்று நோயினால் பல இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, இரண்டு இலட்சத்திற்கு அண்மித்த எண்ணிக்கையிலான மக்கள் பலியாகியிருக்கின்ற இக்கட்டான ( lock down/ Stay home ) கால கட்டத்தில் ஒவ்வொரு வயதுப் பிரிவினரும் எவ்வாறான உளவியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்; என்பதையும் அதிலிருந்து மீள்வதற்கான சில ஆலோசனைகளையும் இங்கு நோக்குவது பொருத்தமானதாக அமையும்.
குழந்தைகளைப் பொறுத்தவரையில் பாடசாலை, விளையாட்டு மற்றும் நண்பர்களுடன் கழிக்க வேண்டிய நேரத்தை வீட்டில் கழிக்க வேண்டியுள்ளது. இதனால் வீட்டில் இருக்கின்ற வேளையில் பெற்றோர்களிடையே சண்டை சச்சரவுகள் இருக்குமாயின் அவர்கள் எதிர்மறையாக துலங்குவார்கள். மேலும், நாளை என்ன நடைபெறுமோ! யார் இறப்பார்களோ! இத்தனை பேர் இறந்து விட்டார்களே! நோய் மிக வேகமாக பரவுகின்றதே! எமது செல்வம், பொருளாதாரம் என்னவாகுமோ! என இவற்றைப் பற்றி பேசிக் கொண்டும் அது பற்றி அஞ்சிக் கொண்டும் இருந்தோமானால் இதனைப் பார்த்து குழந்தைகளும் மனக் குழப்பத்திற்கு உள்ளாவார்கள். இதனால் பிள்ளைகள் அமைதியாக மனச்சோர்வுக்கு (Silent Depression) உள்ளாவார்கள். வீட்டிலுள்ள பெற்றோர் ஏனைய குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு இருக்கிறார்கள், செயற்படுகிறார்கள் என்பதைப் பார்த்து பிள்ளைகளும் அவர்களின் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வர். வீட்டில் சந்தோசமாக இருந்தால் பிள்ளைகளும் மகிழ்ச்சியாகவும் ஊக்கத்துடனும் இருப்பர்.

அடுத்த வயதுப் பிரிவினரான கட்டிளமைப் பருவத்தினரும் ( Adolescence ) பாடசாலை, மேலதிக வகுப்புக்கள் மற்றும் விளையாட்டு போன்ற எதுவும் இல்லாமல் வீட்டில் அடைபட்டு இருக்க வேண்டியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் சிலர் சில வகையான தீய பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர் ((Addiction). இதில் இணைய, சமூகவலைத்தளங்களுக்கு அடிமையாதல் Internet & social media addiction ) மற்றும் தொலைக்காட்சிக்கு அடிமையாதல் ( TV addiction ) ஆகியவற்றிற்கு உள்ளாவதால் இவர்கள் இதன் மூலம் நேர்மறையான ஆக்கபூர்வமான சிந்தனை ஆற்றல் ( Positive Creative Thinking ) அற்றவர்களாக காணப்படுவர்.
பொதுப் பரீட்சைகள் எழுதும் மாணவர்களைப் பொறுத்தவரை பரீட்சை நடைபெறுமா, இல்லையா? எப்போது நடைபெறும்? என்ற குழப்பத்தில் இருப்பார்கள். ஆனால், பெற்றோர்கள் தொலைக்காட்சி, கையடக்க தொலைபேசிகளில் நேரத்தை செலவிட்டுக் கொண்டு பிள்ளைகளை தொடர்ச்சியாக கற்பதற்கு நிர்ப்பந்திப்பார்கள். இங்கு பெற்றோர்கள் புரிந்துணர்வுடன் நடந்து அவர்களை உற்சாகமூட்டி கற்பதற்கு தூண்டுகின்ற அதேவேளை, ஓய்வு எடுப்பதற்கும் அனுமதிக்க வேண்டும்.

வயது முதிர்ந்த பருவத்தினருக்கு முந்திய பருவத்தினரான வளர்ந்தோரே ( Adult age group ) குடும்பத்தில் மிக முக்கியமான வகிபங்கினை வகிப்பர். குடும்பத்தை பாராமரிக்கின்ற பொறுப்புடன் வீட்டிலுள்ள சகல விடயங்களையும் மேற்பார்வை செய்ய வேண்டியவர்களும் இவர்களே. இவர்களுக்கு உடல் ஆரோக்கியம், வேலை வாய்ப்பு, பிள்ளைகளின் கல்வி மற்றும் பொருளாதாரத்தைப் பற்றி மிகக் கூடிய அக்கறையும் அச்சப்பாடும் காணப்படும். இவர்கள் தமக்கும் நோய் தொற்றி விடுமோ என்ற அச்சத்தில் காணப்படுகின்ற அதேவேளை, தான் இறந்தால் தனது குடும்பத்தின் நிலை என்னவாகும் என்ற கவலையோடும் காணப்படுவர். இதனால் இவர்களிடையே ஒரு வகையான விரக்தி (Frustration) காணப்படும்.

அதேபோல், குடும்பத்திலுள்ள வயது முதிர்ந்த அங்கத்தவர்களை நோக்கும்போது அவர்கள் இச்சூழ்நிலையில் நம்பிக்கையற்றவர்களாக (Hopelessness) காணப்படுவர். ஊடகங்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் மற்றும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சுவாச நோய்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோர் கோவிட்- 19 ( Covid – 19 ) ஆல் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என எச்சரித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் இவ்வயதுப் பிரிவினர் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். ஏற்கனவே மரண பயத்தில் உள்ள இவர்கள் தங்களை கொரோனா தொற்றினால் வீட்டில் இருந்து அந்நியப்படுத்தி விடுவார்கள் என்ற மனக் குழப்பத்தில் இருப்பர்.

மேலும், தூர இடங்களில் பிள்ளைகள் இருப்பவர்கள் தங்கள் பிள்ளைகள் எவ்வாறு இருப்பார்கள், பேரன் – பேத்தி எவ்வாறு இருப்பார்கள் என்ற தவிப்பில் இருப்பர். இவர்கள் நாளாந்தம் செய்த நடைப் பயிற்சி, நண்பர்களை சந்தித்தல் போன்ற வாய்ப்புகள் இல்லாமல் சிரமப்படுவர். தமது வழமையான நோய் நிலைமைகள் அதிகரிக்கின்றபோதும் வைத்தியசாலைக்கு செல்வதற்கு தயக்கம் காட்டுவர். ஏனெனில், அங்குள்ளவர்களின் நோய் நிலைமை தொற்றிவிடும் என்ற அச்ச உணர்வு இவர்களிடத்தே காணப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் முதியவர்கள்; எதிர்வரும் நாட்களில் உணவுக்காக என்ன செய்வது என்ற அச்சத்தில் இருப்பர்.

இந்நிலைமையினை எதிர்கொள்ள பல விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பொதுவாக நாங்கள் ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவர்களாக இருப்பதனால் அதன் மூலம் மன அமைதியைப் பெறுவதற்கு முயற்சிப்பது சிறந்ததாக காணப்படுகின்றது. அதிகாலையில் எழுந்ததும் நாம் உயிரோடு இருப்பதற்காகவும் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதன்; ஊடாக ஒவ்வொரு நாளையும் சிறப்பான தொடக்கமாக ஆக்கிக் கொள்ள முடியும்.

அடுத்ததாக, ஒரு நடைமுறை ஒழுங்கை ( Routine ) தயார்படுத்த வேண்டும். இதில் குடும்பத்தை நிர்வகிக்கின்ற வளர்ந்தோரின் பங்களிப்பு முதன்மையானது. ஒரு முழு நாளை எவ்வாறு ஆக்கபூர்வமாக ( constructive ) கழிக்கலாம் என்பது தொடர்பாகவும் பிள்ளைகளோடு மற்றும் பெற்றோருடன் எவ்வாறு நேரத்தை செலவிடப் போகின்றோம் என்பது தொடர்பிலும் திட்டமிடல் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடையே எவ்வாறு நேர்சிந்தனைகளை விதைக்க முடியும் என ஆலோசிக்க வேண்டும். இதற்கும் சரியாக திட்டமிடல் வேண்டும். இயந்திர ரீதியான வாழ்க்கையை விட்டு விட்டு உணர்வு ரீதியான வாழ்க்கைக்கு மீள்வதற்கான ஒரு சிறப்பான சந்தர்ப்பமாகும். எனவே, குடும்ப உறுப்பினர்களுடன் அளவளாவுவதுடன்; மனைவி, பிள்ளைகளுடன் கலந்துரையாடி அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கல். இதன்போது அறிவுரைகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. இந்த உடல், உள, குடும்ப நலம் மற்றும் எதிர்கால வாழ்க்கை தொடர்பாகவும் எமது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து இக்காலப் பகுதியில் திட்டமிடுதல் அவசியமானதாகும்.
தினமும் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்து, தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை வரையறுத்துக்கொள்ள வேண்டும். காலையில் உடற்பயிற்சி செய்தல், வீட்டு வேலைகளில் மனைவி, பிள்ளைகளுக்கு உதவுதல் சிறப்பானதாகும். அதேபோல், சுய திறனை ( Self development) வளர்த்துக் கொள்ளும் ஒரு சந்தர்ப்பமாக இதனை அமைக்கலாம். மொழி தொடர்பான அறிவை அல்லது தொழில் தொடர்பான திறனை வளர்த்துக் கொள்ளலாம். சிறந்த புத்தகங்களை வாசிப்பது, பாடல், நாடகம், நகைச்சுவை நிகழ்ச்சிகளை கேட்பது மற்றும் வரைதல் ( Drawing ), கைப்பணி வேலைகள், செல்லப் பிராணிகளை பராமரித்தல், மீன் வளர்த்தல், வீட்டுத் தோட்டம் மற்றும் வீட்டையும் வீட்டுச் சுற்றுச் சூழலையும் சுத்தம் செய்தல் போன்ற விடயங்களில் ஈடுபட முடியும. மேலும் தியானம் ( Meditation ) மற்றும் யோகவுக்காக சில நிமிடங்களை ஒதுக்குதல் சிறப்பானதாகும். மற்றவர்களின் விருப்பு-வெறுப்புக்கு இடம் கொடுக்காமல் உங்கள் மகிழ்ச்சிக்கும் உங்கள் விருப்பத்திற்கும் சில மணி நேரங்களை ஒதுக்குங்கள். இது எதிர்மறையான சிந்தனையில் இருந்து உள்ளத்தை திசை திருப்ப ( Divert ) உதவும். இவ்வாறு உங்களையும் உங்களைச் சூழ உள்ளவர்களின் ஆரோக்கியத்தையும் சரியாகக் கவனம் செலுத்தினால் உங்களுடைய உள நலனும் மற்றவர்களின் உள நலனும் சிறப்பாக இருக்கும். இதன் மூலம் அரசாங்கத்திற்கும் நாட்டிற்கும் மறைமுகமாக உதவி செய்கின்றோம்.

பொதுவாக கணவர் வேலைக்குச் சென்று வரும் காலப் பகுதியில் வீட்டில் பிரச்சினை குறைவாக இருந்ததாகவும் ஆனால், இப்பொழுது 24 மணி நேரமும் கணவர் வீட்டில் இருப்பதால் சண்டை – சச்சரவு அதிகரித்த வண்ணம் இருப்பதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டுமாக இருந்தால் பொழுதைக் கழிப்பதற்கான நல்ல ஏற்பாடுகள் எங்களிடம் இருக்க வேண்டும். பெண்கள் தனது கணவன்மார் தம்மோடு பேசுவதற்கு சிறிது நேரம் ஒதுக்க வேண்டும் என்பதோடு தாம் செய்யும் வீட்டு வேலைகளில்; ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். எனவே, இதனைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அதே போல், இதற்கு முன்னர் வீட்டில் உள்ள மனைவி, பிள்ளைகளின் செயற்பாட்டினை பாராட்டாமலும் அவர்கள் பேசுவதை செவிமடுக்காமலும் இருந்திருக்கலாம். இருப்பினும் தற்போது நீங்கள் ஒரு நல்ல செவிமடுப்பவராக ( Good Listener ) மாற முடியும். மேலும், குடும்ப அங்கத்தினரின் செயற்பாட்டினை உற்சாகப்படுத்துவதற்கும் பாராட்டுவதற்கும் ஒரு சிறந்த சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

அவ்வாறே வீட்டிலுள்ள வயதான பெற்றோருடன் கழிக்க அருமையான சந்தர்ப்பமாகவும் இதனை பயன்படுத்த முடியும். வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு ஆற்றுப்படுத்தல் செய்ய முடியும். உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது; இந்நோயிலிருந்து பலர் குணமடைந்துள்ளனர். இதில் இறப்பு வீதம் குறைவாக உள்ளது போன்ற விடயங்களை அவர்களுக்கு தெளிவுபடுத்த முடியும். அத்தோடு அவர்களுடைய காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், படிப்பினைகள், தன்னம்பிக்கையை ஊட்டும் கதைகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதற்குரிய வாய்ப்பளித்தால் முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியாக அமையும்.

எமது பெற்றோர், உறவுகள் தூரத்தில் இருப்பினும் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடி அவர்களுக்கு ஆறுதல்களும் ஆலோசனைகளும் வழங்குவது எமது கடமையாகும். மேலும், வெளியில் செல்ல முடியாது மற்றும் நண்பர்களுடன் பேச முடியாது என்பதனால் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இன்றைய நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி Video call மற்றும் Conference call/ Social Media போன்றவற்றின் மூலம் நண்பர்களைத் தொடர்பு கொள்ள முடியுமாகையால் இதிலிருந்தும் இலகுவில் விடுபட முடியும்.
இன்றைய சூழ்நிலையில் கொரோனா நோய் தொற்று தொடர்பாக இருக்கின்ற பயம் ஒரு பொதுவான அச்சம்தான். அதிலும் இறப்பு வீதத்தினை பார்த்தால் அது மேலும் அதிகரிக்கின்றது. சமூக வலைத்தளங்களில் காலையில் இருந்து மாலை வரை தொடர்ச்சியாக ( Updates ) பார்க்கின்றபோது எங்கள் ஆழ் மனதில் பதற்றம் அதிகரித்து விடுகின்றது. இவற்றைப் பார்க்கின்றபோது இது நமக்கோ நம்முடைய குடும்பத்திற்கோ வந்து விடுமோ என்ற பயம் காணப்படும். அதேவேளை, ஏற்கனவே கட்டுக்கடங்காத நினைவு நடத்தை ( OCD- Obsessive compulsive disorder) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சத்தோடு இருப்பார்கள். இவர்களுக்கு இந்த கோவிட்- 19 ( Covid -19 ) ஒரு பெரிய சவாலாகத்தான் இருக்கும். இவ்வாறானவர்கள் இது தொடர்பான செய்திகளிலும் சமூக வலைத்தளங்களிலிருந்தும் சற்று விலகி இருப்பது சிறந்தது.

கோவிட்- 19 ( Covid -19 ) இன் பொருளாதார ரீதியான தாக்கம் ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒவ்வொரு விதமாகத் தாக்கத்தினை ஏற்படுத்தும். வியாபாரிகளுக்கு இது ஒரு சுமையாக அமையும். இதனை ஒரு நேர்மனப்பாங்குடன் எதிர்கொள்ளல் மன அமைதிக்கு வழிவகுக்கும். நாளாந்த வருமானத்தை நம்பி வாழ்பவர்கள் தம்மிடமுள்ள சேமிப்பை பயன்படுத்தல், செலவுகளைக் குறைத்து சிக்கனத்தை மேற்கொள்ளல் மற்றும் உறவினர், அயலவர்களின் உதவியினைப் பெற்றுக் கொள்வதன் மூலம் இந்நிலைமையை ஓரளவு சமாளித்துக்கொள்ள முடியும்.
இச்சூழ்நிலையில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் நெருக்கடிக்குள்தான் இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பிரச்சினையான ஒரு விடயத்தை திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருந்தால் அது மன அழுத்தத்தை அதிகப்படுத்தும். இச்சந்தர்ப்பத்தில் பிரச்சினைகளை விளங்கி பட்டியல்படுத்த வேண்டும். பின்னர் பட்டியல்படுத்திய விடயங்களை தீர்க்க முடியுமா என்று சிந்தித்து, தீர்க்க முடியுமாயின் அதற்குரிய படிமுறைகள் எவை என்று கண்டறிய வேண்டும். தீர்க்க முடியாத பிரச்சினைகள் இருந்தால் அதனை ஏற்றுக் கொள்ள ( Acceptance ) வேண்டும். பிரச்சினை ஒன்றில் போராடி ( Fight ) வெல்ல வேண்டும் அல்லது அதிலிருந்து தப்பித்தல் ( Flight ) வேண்டும். அதுவல்லாது செயற்பாடின்றி ( Freeze ) இருந்தால் மன அழுத்தம் அதிகரித்து தலை வலி, உடல் நோவு, தசை இறுக்கம், கவனம் செலுத்த முடியாமை என்பன ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, தளர்வாக இருந்து ( Relax ) பிரச்சினையைத் தீர்க்க முயல வேண்டும் அல்லது அதனை ஏற்றுக் கொள்வதே சிறந்தது.

இச்சூழ்நிலையில் பலருக்கு தூக்கம் இல்லாமை அல்லது குறைவாக இருப்பதாக அங்கலாய்க்கின்றனர். இது ஒரு பயத்தின் வெளிப்பாடாகும். சிலவேளை மன அழுத்தம் அல்லது மனப் பதற்றம் ஒன்றின் அறிகுறியாகவும் இருக்கலாம். அல்லது ஒருவருடைய வாழ்க்கை முறையும் ஒரு காரணமாக அமையலாம். (இது தொடர்பாக பின்னர் விரிவாக ஆராய்வோம்).

மேலும், மதுபானப் பாவனை மற்றும் புகைத்தலில் ஈடுபடுபவர்களுக்கு இந்நிலைமை பெரிய சவாலாக அமையும். இதிலிருந்து அவர்கள் விடுபடுவதற்கான ஒரு சிறந்த சந்தர்ப்பமாக இதனை அமைத்துக் கொள்ளலாம். (இது தொடர்பாகவும் பின்னர் விரிவாக ஆராயப்படும்).
கோவிட்- 19 ( Covid- 19 ) ஏற்படுத்திய பாதிப்பு ஒட்டு மொத்த உலகிற்கும் பொதுவானது. மாறாக, ஒருவருக்கோ சிலருக்கோ ஏற்பட்டதல்ல என்ற மனப்பாங்கை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் இதனை ஏற்றுக் கொண்டு அதற்காக போராடுவோம். இந்நோயின் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள உறவுகளுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருப்பதுடன் நேரடியான மற்றும் நேரடி தொடர்பற்ற உளவளத்துணைக்கான ( Direct & Virtual Counseling ) சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்போம். இந்நோய்த் தொற்றுக்குள்ளானவர்களை தவறிழைத்தவர்கள் போன்று பார்க்காமல் மனித நேயத்துடன் நோக்க வேண்டும். மேலும், பொறுப்பு வாய்ந்தவர்களிடமிருந்து வருகின்ற அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் கருத்திற்கொண்டு இத்தொற்று நோய் சமூகப் பரவலடைவதை தடுக்க காத்திரமாக பங்களிப்பு செய்வோம். இந்நாட்களை வெறும் ஓய்வாக மாத்திரம் கருதாமல் பின்னால் வருகின்ற வாழ்க்கைக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்வோம். இவ்வுலகம் பல்வேறு பாரிய அழிவுகளை சந்தித்து அதிலிருந்து மீண்டுள்ளது. இறை உதவியால் இதில் இருந்தும் நிச்சயம் மீண்டு விடுவோம். எனவே, மன உறுதி, மனக்கட்டுப்பாடு மற்றும் சமூக அக்கறையுடன் செயற்படுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *