கொரோனாவுக்குப் பின்னரான இலங்கைப் பொருளாதாரம்!

எம்.ஐ.எம். நியாஸ் (B.Sc {SEUSL}, MLRHRM {Col}, MDS {Col}, LLB {OUSL}) உதவி ஆணையாளர், உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

கொரோனா வைரஸின் ( Corona Virus ) பரவல் உலகப் பொருளாதாரம் மற்றும் சீனப் பொருளாதாரத்தில் மந்த நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் சீனாவுடன் ஏற்றுமதி- இறக்குமதி வியாபாரத்தில் தங்கியிருக்கின்ற ஆசிய பசுபிக் வலய நாடுகள் பாரியளவிலான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளன. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. இலங்கையானது சீனாவுடன் வியாபாரம், முதலீடு மற்றும் உல்லாசப் பயணம் போன்ற துறைகளுடன் பல தசாப்த காலமாக தொடர்பு வைத்து வருகின்றது.
கடல் கடந்த அபிவிருத்தி நிறுவனம் ( ODI ) மூலம் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கை, கொரோனா வைரஸின் தாக்கம் சீனாவுடன் தொடர்பு வைத்துள்ள நாடுகள் அனைத்தினதும் பொருளாதாரத்தை மந்த கதி ஆக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனிடையே குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தைக் கொண்ட இலங்கை போன்ற நாடுகள் மிகவும் சிக்கலான நிலையை அடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.

சீனா தற்போது இலங்கையில் 3 வீதம் ஏற்றுமதி வியாபாரத்தையும் 21 வீதம் இறக்குமதி வியாபாரத்தையும் செய்து வருகின்றது. அமெரிக்கா, இந்தியா, ஜேர்மன் மற்றும் இங்கிலாந்துடன் ஒப்பிடுகையில் சீனாவானது இலங்கைக்கு ஒரு முக்கிய ஏற்றுமதி சந்தையல்ல என்றாலும் விலை உயர்ந்த உலோக தாதுக்கள், காலணி, இதர அடிப்படை உலோகங்கள் போன்றன சீனாவில் நல்ல கேள்விகளைக் கொண்டிருப்பதால் இப்பொருள்களுக்கான ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இப்பொருட்கள் 20 வீதத்தை விட கூடுதலாக இலங்கையிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவை அடுத்து சீனாவின் பொருட்கள், சேவைகள் இறக்குமதியில் இரண்டாம் இடத்தைக் கொண்டுள்ள இலங்கை, தற்போது பொருட்கள், சேவைகளை இறக்குமதி செய்வதில் பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. இலங்கை பெருவாரியாக இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், இலத்திரனியல் உபகரணங்கள், ஆடைகள், ஆடைக்கான நூல்கள், இரும்பு மற்றும் உருக்கு போன்றவற்றை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்கின்றது. சீனாவில் இந்நோயின் தாக்கத்தினால் போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டு கப்பல் கடல்வழி போக்குவரத்து தாமதம் அடைந்துள்ளதால் இப்பொருட்களுக்கான இறக்குமதி பெரியளவில் பாதிப்படைந்துள்ளன. மேலும், சீனாவிடமிருந்து இப்பொருட்களை இறக்குமதி செய்யும்போது அப்பொருட்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற அச்ச நிலை இலங்கை போன்ற நாடுகளுக்கிடையில் காணப்படுவதால் பொருட்களின் இறக்குமதியில் சந்தேகம் உள்ளது.

2019 ஏப்ரல் 21ஆம் திகதியில் நடைபெற்ற ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலையடுத்து இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் போக்குவரத்து துறை மிகவும் பாதிக்கப்பட்டு மீள் எழுச்சி பெற்று வருகின்ற சந்தர்ப்பத்தில் கொரோனா வைரஸ் தொற்று மேற்படி துறைகளை மீண்டும் பாதித்துள்ளது. இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிபரத்தின்படி சீனாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில் 2020 ஜனவரி காலப் பகுதியில் 6 வீதத்தினால் குறைவடைந்திருந்தது. மேலும், இலங்கை எயார்லைன்ஸ் மற்றும் சீனா விமான சேவையும் வீழச்சி கண்டிருந்தது. கடந்த தசாப்தத்தில் சீனாவிலிருந்தான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு பெரும் அந்நியச் செலாவணியைப் பெற்றுக் கொடுத்திருந்தனர். இது இலங்கையின் மொத்த வருமானத்தில் 10 வீதத்திலும் கூடியதாகும்.

இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான அபிவிருத்தியில் சீனா பெரும் பங்களிப்பை ஆற்றி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் சீனா அதிகமான பணியாhட்களை இவ் அபிவிருத்தி வேலைகளுக்கு பணியமர்த்தியுள்ளன. போர்ட் சிட்டி ( Port City ) மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு போன்ற செயற்திட்டங்களில் அதிகமான சீன, இலங்கை பணியாட்கள் ஈடுபடுத்தப்படுவதினால் இச்செயற்றிட்டங்கள் இலங்கையில் வேலை வாய்ப்பை அதிகரித்துள்ளன. இந்நிலைமை இவ்வைரஸ் தொற்றினால் சீன இலங்கை பணியாட்களுக்கிடையில் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. இதனால் சீன பணியாட்களுடன் இலங்கை பணியாட்கள் சேர்ந்து வேலை செய்ய மறுத்துள்ளமை இச்செயற்றிட்டங்களை தொடர்ந்து கொண்டு செல்வதில் இழுபறி நிலையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் பொருளாதாரத்தில் மிக மோசமான மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது உலக பொருளாதாரத்திற்கான முடக்கம் ஆகும். இந்நிலைமை இலங்கையின் பொருளாதாரத்தின் மீது கடுமையான தாக்கத்தை எற்படுத்தும். இலங்கையின் சுற்றுலாத்துறை, போக்குவரத்து துறை நிறுத்தப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், தொழில் பார்க்கும் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஹோட்டல்கள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இலங்கையின் கைத்தொழில் உற்பத்தியின்போது பயன்படுத்;தப்படும் மூலப்பொருட்களுடைய வழங்கல்கள் மற்றும் பொருட்களினுடைய தொடர்ச்சியான விநியோகங்கள் என்பன சீர்குலைந்துள்ளன. தொழில் வாய்ப்பு, வருமான மூலங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் உலகம் முழுவதும் கடுமையாக பாதிப்புற்றுள்ளன.

உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சீர்குலைவு இலங்கையின் ஏற்றுமதி, இறக்குமதி பொருளாதாரத்தை பல வழிகளில் பாதித்துள்ளன. வியாபார சமநிலை மற்றும் சென்மதி நிலுவை மீதான பாதகமான விளைவுகள் இலங்கையின் பொருளாதாரத்தில் மிகவும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் குறைவடைந்துள்ளது. சுற்றுலாத் துறை மூலம் கிடைக்கும் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள அதேநேரம் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்றுள்ள தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி குறைவடைந்திருக்கிறது. இவை அனைத்தும் அதிகளவில் இலங்கை பெற்றுள்ள வெளிநாட்டுக் கடன் சுமைகளை அடைப்பதற்கு உதவும் வருமான மூலங்களாகும். இவை இன்று இல்லாமல் போயுள்ளது. இதனால் இலங்கை எதிர்காலத்தில் அதிக வட்டியுடன் இக்கடன் சுமையைப் பொறுப்பேற்க வேண்டிவரும்.
மூலப்பொருட்களின் விநியோகத்தில்; ஏற்படும் தடையாலும் சர்வதேச கேள்விகளின் குறைவாலும் ஏற்றுமதி செய்யும் பொருட்களின் உற்பத்தி குறைவடைந்து இலங்கையின் மொத்த ஏற்றுமதி குறைவடையும். இதனால் வர்த்தக பற்றாக்குறை கணிசமானளவு அதிகரிக்கும்.

கடந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் சுற்றுலாத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டு சென்மதி நிலுவை மிகவும் கடுமையான பின்னடைவை காண்பித்திருந்தது. இந்த நிலைமையிலிருந்து இலங்கை மீண்டெழுகின்ற சந்தர்ப்பத்தில் இந்த கோவிட் 19 மீண்டும் சர்வதேச பயணத்திற்கு பாரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு 2018இல் 8.7 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த சுற்றுலாத் துறை வருமானம் இவ்வருடம் 3.5 பில்லியன் அமெரிக்க டொலராக குறைவடையக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. இது 18 சதவீத வீழ்ச்சியாகும். இலங்கையின் சுற்றுலாத் துறையில் சீனாவின் சுற்றுலாப் பயணிகளது எண்ணிக்கை இலங்கைக்கு இரண்டாவது மிகப் பெரிய பயணிகளைக் கொண்டதாகும். இது கிட்டத்தட்ட இலங்கைக்கு வரும் மொத்த சுற்றுலா பயணிகளில் 10மூ ஆகும். இது தற்போது இலங்கைக்கு கிடைக்கும் வருமானத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும். இதேபோல், கொவிட் 19 தொற்றினால் மேற்கத்திய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் பயணத் தடை மற்றும் வீசா கட்டுபாடுகள் காரணமாக அவர்களின் வருகையும் மிகக் குறைவாக இருக்கும்.
இலங்கையின் சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருமானம் கடுமையான பாதிப்புக்குள்ளானதால் சென்மதி நிலுவையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 2020ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டும் வருமானத்தை உத்தேசமாக மதிப்பிடுவதற்கு கடினமாக இருக்கும். ஆனாலும் 2020இல் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களால் கிடைக்கும் வருவாயில் முழுவதும் 2020ஆம் ஆண்டுக்குரிய சென்மதி நிலுவைக்கு பயன்படுத்தப்படும். மேலும், சுற்றுலாத் துறையில் இருந்து கிடைக்கும் வருமானம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறையக்கூடும் நிலையில் 2020ஆம் ஆண்டுக்கான செலுத்த முடியாத நிலுவைப் பணம் மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்;ப்பு பணியாளர்களின் மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி இலங்கையின் சென்மதி நிலுவைக்கு குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பு செய்து வந்துள்ளது. நீண்ட காலமாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு மூலம் தொழிலாளர்களின் பண வைப்பு பாரிய வியாபார பற்றாக்குறையை நிவர்த்தி செய்து வந்துள்ளதுடன், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு கணிசமான பங்களிப்பை செய்து வருகிறது. இந்நிலைமை கோவிட் 19 தொற்றினால் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
ஏற்றுமதி வியாபாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி சுற்றுலாத் துறையிலிருந்து கிடைக்கின்ற வருமானத்தின் குறைவு மற்றும் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு தேடிச் சென்றுள்ள பணியாளர்களின் பங்களிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பன மிகப் பெரிய சென்மதி நிலுவை பற்றாக்குறையை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. இந்நிலைமை இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கங்களையும் வெளிநாட்டு கடன்களை மீளச் செலுத்தும் கடப்பாடுகளையும் மந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், அதிக வீதத்திலான வட்டியுடன் கடன் சுமையை ஈடுசெய்ய வேண்டிய நிலை உருவாவது தவிர்க்க முடியாதது.

மேலும், இலங்கையின் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நாணய மதிப்பிறக்கம் (நாணய பெறுமதியின் ஸ்திரமற்ற தன்மை), புதிய அரசாங்கத்தின் வரிக் கொள்கை, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கடன் சுமை சீனா, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பெறப்பட்ட கடன் மேலும் உள்@ர் உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, அரசியல் ஸ்திரமற்ற தன்மை மற்றும் இனவாத வெறுப்பு பேச்சுக்களினால் ஏற்படும் உள்நாட்டு குழப்பம் போன்ற காரணிகளுடன் கொரோன வைரஸ் தாக்கமும் இலங்கை அடையப்போகும் பொருளாதார மந்த நிலையை மேலும் ஊக்குவித்து மிகவும் மோசமான பொருளாதார பின்னடைவுக்கு இட்டுச் செல்லும்.

இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல்களுக்கு அதிக பணத்தை செலவிட வேண்டியிருப்பதனால் அதற்கான பாரியளவிலான பணத்தை எங்கிருந்து பெறுவது என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா தாக்கத்தை எதிர்கொள்வதற்கான சுகாதார செலவினம் எமது நாட்டுக்கு பாரிய சவாலாக இருக்கின்ற நிலையில், தேர்தலுக்கான செலவுகள் இலங்கையின் சென்மதி நிலுவையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பது உறுதி. இதனை நிவர்த்தி செய்ய இலங்கையானது சீனா, இந்தியா போன்ற நாடுகளிடம் கையேந்தும் நிலை உருவாகும். இதன் மூலம் இலங்கை அந்நாடுகளின் கைப்பாவையாக மாறும் அச்சநிலை தோன்றியுள்ளதுடன் இந்நாடுகள் இலங்iயின் அரசியல், சமூக, பொருளாதாரக் கொள்கையில் தலையிடும் வாய்ப்பும் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

எனவே, இலங்கை அரசாங்கமும் மக்களும் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். அத்துடன் இலங்கையின் அரசியல், பொருளாதார கொள்கைகளை வகுக்கும் கொள்கை வகுப்பாளர்கள், துறைசார்ந்தவர்கள், உரிய அரச நிறுவன அதிகாரிகள், சட்ட அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் போன்றோர் உலகப் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்ற கோவிட் 19 தொற்று நோயை முன்னிலைப்படுத்தி சென்மதி நிலுவை பற்றாக்குறை மற்றும் வர்த்தக பற்றாக்குறை என்பவற்றை கருத்தில் கொண்டு வரிக் கொள்கை மற்றும் நாணய கொள்கைகளை காலத்தின் தேவை கருதி ஒரே நேர்கோட்டில் வைத்து ஐ.நா.வின் சர்வதேச நிறுவனங்களுடனும் மற்றும் அங்கத்துவ நாடுகளுடனும் ஒன்றிணைத்து ஒரே கூரையின் கீழ் இருந்து உருவாக்க வேண்டும்.
உலக வர்;த்தக அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரொபர்ட் அஸ்வடோ ( Roberto Azevedo ) தெரிவித்தது போன்று, இதற்கு ஒரே வழி உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து புரிந்துணர்வு அடிப்படையில் பணியாற்றினால் மட்டுமே விரைவான பொருளாதார மீட்சி சாத்தியமாகும். அதேபோல் அவர் சொன்னது போன்று இதன்போது நிதி வரி மற்றும் வியாபாரக் கொள்கைகள் எல்லாம் ஒரே திசையில் பயணிக்க வேண்டிய தேவை உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *