முன்னாயத்தமும் திட்டமிடலும் காலத்தின் தேவை!

எம்.டி.எம். றிஸ்வி (மஜீதி) MA, Mphil
சிரேஷ்ட விரிவுரையாளர்
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம்

இன்று உலகம் சோதனைக் களமாக மாறியுள்ளது. செவ்வாய்க்கு சுற்றுலா செல்லலாம், பிரபஞ்சமே எங்கள் கரங்களில், உலக ஜாம்பவான்கள் நாங்களே என தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் வல்லரசுகள்கூட கொரோனாவின் அகோரப் பிடியால் விழிபிதுங்கி நிற்கின்றன.

உலக நாடுகளுள் பல ஒரு புறம் மரணப் போராட்டத்தில் மறுபுரம் வாழ்வுக்கான போராட்டத்தில் சிக்கித்தவிக்கும் அவலம். பொருளாதார இழப்புகள், தொழில் இழப்புகள், வறுமை, பசி, பஞ்சம், பட்டினி, குடும்பச் சீர்குலைவுகள், ஆன்மிக வீழ்ச்சி… என சோதனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்ற நிலையில், இதிலிருந்து மீளுவது எப்படி என ஒரு புறம் விஞ்ஞானிகளும் மறுபுறம் மெய்ஞ்ஞானிகளும் ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

வாழ்வில் ஒருபோதும் அனுபவித்திராத, கண்களுக்குப் புலப்படாத இத்தகு வைரஸ்களின் அட்டகாசம் பற்றி பலரும் பல்வேறு அபிப்பிராயங்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். இயற்கையின் சீற்றம், இறைவனின் கோபம், கடவுளின் சாபம், மனிதன் தான் தேடிக் கொண்ட கைவினையின் விளைவு, இறை நியதி… என ஆன்மிகவாதிகளும் இந்த வைரஸ் உருவாக்கிப் பரவ விடப்பட்ட கொடுமை, வல்லரசுகளுக்கிடையான மறைமுகப் போர், பொருளாதாரத்தை அழிப்பதற்கான யுக்தி, பொறாமையின் சூழ்ச்சி, நாடுகளுக்கிடையான பலப்பரீட்சை, மூன்றாம் உலகப் போர்… என வரலாற்று ஆய்வாளர்களும் கொரோனா பல ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வைரஸ் குடும்பம், அக்குடும்ப அங்கங்களுள் ஒன்றுதான் “கோவிட்-19” அதுவே இது@ இது பறவை, மிருகங்களிலிருந்து தோன்றியது, அது சீனாவின் வுஹான் பிரதேச சந்தைப் பகுதியிலிருந்தே உருவானது என மருத்துவ ஆய்வாளர்களும் கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு இதன் தோற்றத்தில் அல்லது உருவாக்கத்தில் பல்வேறு அபிப்பிராயங்கள். மனித அறிவு ஒரு எல்லைக்குற்பட்டதே என்பது இதன் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. இதுவரை அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மருத்துவ உலகம் பாரிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

எது எவ்வாறிருந்த போதிலும், இவ்வைரஸ் என்றோ ஒரு நாள் இறைவனின் உதவியினால் இவ் உலகை விட்டும் நீங்கும். இருந்தபோதிலும் உலகம் மற்றொரு சோதனைக்கு முகம் கொடுக்கத்தான் போகிறது. அதுதான் பொருளாதார வீழ்ச்சி, உணவுத் தட்டுப்பாடு, வருமானமின்மை, வறுமை. இவை சாதாரண சோதனைகள் அல்ல. மனித வாழ்வின் அடிப்படைப் பிரச்சினைகளாகும். அதனால் குடும்ப வாழ்வு சீர்குலையும் சமூக சீர்கேடுகள் உருவாகும் களவு, கொலை, கொள்ளை மற்றும் பாதக செயல்கள் அதிகரிக்கும். அறிவு, ஆன்மிகம், பண்பாடுகளில் வீழ்ச்சி நிலை தோன்றும். சடவாதம் தலைவிரித்தாடும். துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கும். மனிதப் போராட்டங்கள் உருவாகி நாடுகளுக்கிடையான மற்றொரு போராட்டம் தொடங்கி விடும். மொத்தத்தில் தனி மனித, குடும்ப, சமூக வாழ்வு நிலைகளில் பாதிப்புகள் தவிர்க்க முடியாது போய்விடும். கண்களுக்குப் புலப்படாத அந்த வைரஸின் பிடியிலிருந்து விடுபட்டாலும் கண்களுக்குப் புலப்படும் வறுமையிலிருந்து நாம் மீள வேண்டுமாயின் திட்டமிடல் ( Plane ) காலத்தின் கட்டாயமாகும். திட்டமிடல் உண்மையில் எம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னேற்பாடாகும். தனி மனிதனோ ஒரு சமூகமோ அல்லது ஒரு தேசமோ தம்மை அனைத்து சோதனைகளிலிருந்தும் காத்துக்கொள்வதற்கான அடிப்படை அம்சங்களே திட்டமிடலும் முன்னாயத்தமும்.

இந்த சந்தர்ப்பத்தில் ஒரு சிறந்த அல்குர்ஆனிய முன்மாதிரியை எமது தேசத்துக்கு முன்வைக்க விரும்புகிறேன். அதுதான் இறைதூதர் யூஸ{பின் எதிர்கால பொருளதார மேம்பாட்டு முன்னாயத்த முன்மொழிவுகள். அதாவது எகிப்திய அரசன் அன்று ஒரு கனவு காண்கிறான்.
“கொழுத்த ஏழு பசுக்களை மெலிந்த ஏழு பசுக்கள் புசிக்கின்றன.நன்கு விளைந்த ஏழு கதிர்கள், காய்ந்து உலர்ந்த ஏழு கதிர்கள்.”
இவை தன் கனவில் தோன்ற அதன் விளக்கத்தை அன்று கனவுக்கான விளக்கம் கூறும் ஆற்றல் பெற்றிருந்த யூஸ{ப் என்ற இறைதூதரிடம் வினவ அவர் சொன்னார். எகிப்தில் எதிர்வரும் ஏழு ஆண்டுகளுக்கு பஞ்சம் ஏற்படப் போகிறது@ நாட்டை வறுமை பீடிக்கப் போகிறது. எனவே, அதிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்க அதற்கான பயிரிடும் விவசாய வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேணடிய காலத்தின் கட்டாயம் தோன்றியுள்ளது என்பதை அரசருக்கு உணர்த்தினார். உடனே அவ்வரசன் தூதர் யூஸ{பை அப்பொருளாதார திட்டமிடல் பொறுப்பாளராக நியமனம் செய்தார். (அத்தியாயம் 12 வசனம் 46- 47)
இன்று இச்சம்பவம் எமக்குச் சொல்வது பயிரிடல், தோட்டம் செய்தல், பூமியை வளப்படுத்தல், பயிர்ச்செய்கையை ஊக்குவித்தல் என்பன காலத்தின் அவசியமும் எதிர்கால உணவுத் தேவையின் முக்கியத்துவத்தையுமாகும்.

அறியாமை, வறுமை, நோய் என்பன ஒரு தேசத்தின் பெரும் சோதனைகளாகும். அவற்றின் தீங்குகளிளிருந்து பாதுகாப்புப் பெற வேண்டுமாயின் முன்னேற்பாடு, முன்னாயத்தம், திட்டமிடல் இன்றியமையாதவை. அதுவே நாளைய எமது வெற்றி. திட்டமிடத் தவறின் தவறுவதற்கு திட்டமிடுகிறோம் என்பது தத்துவமாகும். வரலாற்றில் எந்தவொரு வெற்றிக்குப் பின்னாலும் திட்டமிடல் மற்றும் முன்னாயத்தம் அடிப்படையாக அமைந்துள்ளது என்ற பேருண்மையைப் புரிந்து கொள்வோம்.
திட்டமிட்டு தேசம் காப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *