பாடசாலை திறம்பட இயங்குவதில் அதிபரின் முகாமைத்துவ வகிபாகம்

ஆர். சதாத் ரெலிகான்

Visiting lecturer, Master Teacher (OUSL, NIE)

முகாமைத்துவம் என்பது ஒரு நிறுவனத்தையும் அதன் ஆளணியினரையும் நிர்வகிப்பது அல்லது மேற்பார்வை செய்வது மாத்திரமன்று, அந்நிறுவனங்களுக்குத் தேவையான பொருத்தமான ஆளணியையும் பௌதிக உள்ளகக் கட்டமைப்பையும் பேணுவதன் மூலம் ஒழுங்கான மேற்பார்வை கண்காணிப்பு என்பனவற்றுடன் ஊழியர்களின் தனிப்பட்ட நலன்களைப் பாதுகாத்து அவர்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம் அந்த நிறுவனத்தின் உச்ச வெளியீட்டை அதிகரிப்பதுதான் முகாமைத்துவம் ஆகும்.

“வரையறுக்கப்பட்ட வளங்களைக் (மனித, பௌதிக) கொண்டு ஒரு நிறுவனம் எவ்வாறு தனது குறிக்கோளை அடைந்து கொள்ள முடியும் என எடுத்துக்கூறும் கலைதான் முகாமைத்துவம்” என ஈ.எல். பிரெச் கூறியுள்ளார். பொதுவாக ஒரு முகாமைத்துவம் பின்வரும் நான்கு மூலகங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

  • திட்டமிடல்
  • ஒழுங்கமைப்பு
  • தலைமைத்துவம்
  • கட்டுப்படுத்தல்

இவ்வாறு கோட்பாட்டு ரீதியாக பாடசாலைகளில் முகாமைத்துவத்தை நிர்வகிக்கின்றபோது அப்பாடசாலைகளின் பெயர் உயர் மட்டத்தை அடைவதை நாம் அவதானிக்க முடியும்.

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு இருக்க வேண்டிய பண்புகள், அவரின் நடிபங்கு என்பவற்றை பல்வேறு அறிஞர்களும் முகாமைத்துவக் கற்கை ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர். அவ்வாறான கோட்பாடுகள் என்ன கூறுகின்றன? அக்கோட்பாட்டிற்கு இசைவாக நமது பாடசாலை நடைபெறுகின்றதா? பாடசாலையின் முகாமையாளர் அதனைச் சரிவர செய்கின்றாரா? என நாம் படம் போட்டுப் பார்க்கின்றபோது பாடசாலையின் முகாமைத்துவ நிருவாக அமுல்படுத்தலில் பல காரணங்கள் தடையாக அமைவதை நாம் அவதானிக்க முடியும். அவற்றில் சிலவற்றை நாம் தொட்டுச் செல்கின்றபோது அடையாளப்படுத்த வேண்டிய விடயங்களாக சிலவற்றை நாம் நோக்க முடியும்.

வாண்மை விருத்தியில்லாத ஆனால், அனுபவம் வாய்ந்த அதிபர்கள் இதே போன்று அனுபவமற்ற வாண்மை விருத்தியுள்ள அதிபர்கள் நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளில் மேற்கூறியவற்றில் ஒன்று இருந்து மற்றொன்று இல்லாதபோது அவர் நிருவாகத்தில் சில சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இதே போன்று அனுபவமும் வாண்மை விருத்தியும் உள்ள அதிபர் ஒருவருக்கு அரசியல் தலையீடுகள் நிருவாகத்தை அமுல்படுத்துவதற்கு தடைகளாக உள்ளதையும் நாம் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

இவ்வாறு பல தலையீடுகளை ஒரு முகாமையாளர் எதிர்நோக்குகின்றபோது ஒரு சிறந்த முகாமையாளர் என்ற வகையில் அதிபர் இவ் விடயங்களுக்கு அப்பால் தனது போக்கை மாற்றி தனது நிறுவனம் வளர வேண்டுமென்ற கொள்கையுடன் செயலாற்றுவாரானால் அவரால் அப்பாடசாலையை கட்டியெழுப்ப முடியும்.

அதிபர் Boss என்ற நிலையிலிருந்து விடுபட்டு Executive Officer என்ற நிலைக்கு வர வேண்டும். ஏனென்றால், ஒரு பாடசாலை குடும்பத்தில் அனுபவம் வாய்ந்த வயது முதிர்ந்த ஆசிரியர்களும் வாண்மை விருத்தியுள்ள இளம் ஆசிரியர்களும் இருப்பர். இவர்களின் ஆற்றலையும் அனுபவத்தையும் அதிபர் பெற முயற்சிக்க வேண்டும். இந்த அடிப்படையில் அதிபர் ஒரு நிறைவேற்று நிருவாகி என்ற வகையில் சில கோட்பாட்டை மையமாக வைத்து முகாமைத்துவத்தை மேற்கொள்கின்றபோது பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.

இதனடிப்படையில் மினிஸ்பேக்கின் நடிபங்குக் கோட்பாடு ரீதியாக பாடசாலை நிருவாகத்தை அமுல்படுத்துகின்றபோது சிறப்பான முகாமைத்துவ நிருவாகத்தை நடைமுறைப்படுத்த முடியும். மினிஸ்பேக் பிரதான மூன்று நடிபாகங்களூடாக பத்து நடிபங்குகளை முன்வைத்துள்ளார்.

பிரதான நடிபங்கு, ஆளிடைத் தொடர்பு நடிபங்கு, தகவல் தொடர்பு நடிபங்கு, தீர்மானமெடுத்தல் நடிபங்கு.

பாடசாலையில் அதிபரின் தொழிற்பாடுகளை பிரதானமாக மூன்று தலைப்பின் கீழ் இனங்காணலாம். 

1. ஆளிடைத் தொடர்பு நடிபங்கு

தலைமைத்துவம்

தலைவர்

இணைப்பாளர்

2. தகவல் தொடர்பு நடிபங்கு

கண்காணிப்பாளர் 

தகவல் பரப்புனர் 

பேச்சாளர்

3. தீர்மானம் எடுத்தல் நடிபங்கு

முயற்சியாண்மையாளர்

பிரச்சினையைக் கையாள்பவர்

வள ஒதுக்கீட்டாளர்

பேசித் தீர்ப்பவர்

என இப்பிரதான நடிபங்கினை செவ்வனே செயற்படுத்துவதன் மூலம் பாடசாலையை திறம்பட கட்டியெழுப்பலாம். இதற்கு அதிபர் தன்னை இற்றைப்படுத்திக் கொள்வதன் மூலமே சாத்தியமாக்க முடியும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *