கொரோனாவும் கொதி கிளப்பும் கொண்டாட்டங்களும்

அஷ்ஷெய்க்  அப்துல் அஸீஸ் (நளீமி)

கோவிட்- 19 இறைவனால் அனுப்பப்பட்ட மாபெரும் சோதனை. இதற்கு முன்னர் தொடர்ந்தும் பல சோதனைகளை நாம் சந்தித்திருக்கின்றோம். சுனாமி, டெங்கு என்று… இன்னோரன்ன சோதனைகளை இறைவன் எங்களுக்கு அனுப்பி எங்களை புடம்போட நினைக்கின்றான் போலும்.

“நிச்சயமாக கொசுவை  அல்லது அதைவிட தரம் குறைந்த ஒன்றை உதாரணமாக கூறுவதற்கு வெட்கப்பட மாட்டான்” என்று  அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகின்ற வசனத்தை சற்று உற்றுநோக்கிப் பார்ப்போம்.

மிக அற்பமான நுளம்பைக் கண்டு படைகள் பயந்தன; ஆட்சியாளர்கள் அஞ்சினர். ஆனால், கால ஓட்டத்தில் மனித சமூகம் இந்தப் படிப்பினை தரும் மாபெரும் சோதனைகளை மறந்தது.

எனவேதான் கொரோனா எனும் அற்பமான கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸ் கிருமியை அனுப்பியிருக்கிறான். இது நுளம்பை விட அற்பமான ஒன்று. இவ்வாறு நுளம்பை விட அற்பமான ஒன்றை உதாரணம் கூற வெட்கப்பட மாட்டேன் என்று சொன்னது போல. அதனைக் கண்டு இன்று உலகையே ஆட்டிப் படைக்கின்ற வல்லரசுகள் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கின்றன. உலக நாயகன் என தன்னை மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா இன்று திணறிக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். இன்று திரைமறைவில் உலகையே  ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்ற இஸ்ரேல் என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றது. 

நுளம்பை விட அற்பமான ஒரு படைப்பாகிய இதன் அட்டகாசத்தை காண்கின்ற மனித சமுதாயம் படிப்பினை பெறாமல் இருப்பதாகவே உணர முடிகின்றது. இவ்வாறு தொடர்ந்தும் படிப்பினைகளை தந்து கொண்டிருக்கின்ற வல்ல நாயன் எம்மை சிந்தித்து செயற்படுமாறு வேண்டுகின்றான். 

இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற கொரோனா எத்தனையோ பல படிப்பினைகளை எமக்கு தந்து கொண்டிருக்கிறது. நாம் எவற்றையெல்லாம் இவ்வளவு காலம் கடமைகள் என பின்பற்றி வந்தோமோ அவற்றையெல்லாம் புறம் தள்ளி வைத்திருக்கிறோம். ஒருவரை ஒருவர் கைலாகு கொடுத்து கட்டித் தழுவும் அழகிய இஸ்லாமிய கலாசாரதை இன்று தற்காலிகமாக பின்பற்றுவது கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாம் வாழும் இந்நாட்டில் பெண்கள் முகத்தை மறைப்பது மாபெரும் குற்றம் என்று பார்க்கப்பட்ட நிலையில், இன்று ஆண்களும் பெண்களும் முகத்தை மறைப்பது கட்டாயம் என்று கூறும் நிலைக்கு வந்திருக்கிறோம். பள்ளிவாசலுக்கு சென்று கூட்டாக தொழுவது கடமை என்றும் தோளோடு தோள்  காலோடு கால் படும் அளவு நெருங்கி நின்று தொழ வேண்டும். 27 மடங்கு நன்மை என்று சொன்ன கூட்டுத் தொழுகையை விட்டு விட்டு வீடுகளில் தனித் தனியே தொழுது கொள்ளுங்கள் என்று நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றோம். வெள்ளிக்கிழமை நாளில்  அனைவரும் ஒன்றுகூடி ஜுமுஆ தொழுவது எங்கள் கடமை. ஆனால், ஒரு ஜுமுஆத் தொழுகையினையும் விடாது தொழுத நாம் இன்று பல ஜுமுஆக்களை நிர்ப்பந்தமாக விட்டிருக்கிறோம்.

எமது செல்லக் குழந்தைகளை கட்டித் தழுவி முத்தமிடுவதை முற்றாக ஒதுக்கி இருக்கிறோம். கைலாகு கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம் போல் உணர்கிறோம். இன பந்துகளை குசலம் விசாரிக்கச் செல்வது கூடாது என்று  வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்கிறோம். இப்படி  எத்தனை எத்தனையோ நற்கருமங்களை  செய்யாமல் நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு  கொரோனாவை பூண்டோடு அழிப்பதற்கு நாம் அனைவரும் கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதித்திருக்கிறோம். 

“அந்நாளில் ஒரு மனிதன் தன் சகோதரனை விட்டு தன் தாய் தந்தையை விட்டு  மனைவி மக்களை விட்டு விரண்டோடுவான். ஒவ்வொருவனுக்கும் அவனவன் காரியங்களே முக்கியமானதாக இருக்கும்” என அல்குர்ஆன் குறிப்பிடுவது போன்று சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் ஒருவரை ஒருவர் கண்டும் காணாதவர் போல் அந்த மறுமைக் காட்சியை நினைவில் கொண்டு வருவது போன்று ஓடிக் கொண்டிருக்கிறோம்.

முஸ்லிமின் ஜனாஸா எரிக்கப்படுகிறது. இந்த நிலையை பார்க்கும் ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளமும் எரிந்து சாம்பலாகி விடுகிறது. அந்த வேதனையை உணர்ந்து கொண்டு பொறுமையாக இருக்கின்றோம்.

இவ்வாறு இந்தக் கொரோனா எம்மையெல்லாம் சோகத்தில் ஆழ்த்தி மாண்டுபோன அந்த மனித குணங்களை எல்லாம் பார்த்து நொந்து போன நிலையில் ரமழான் பெருநாளையும் எப்படிக் கொண்டாடுவது என்று சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

எங்களது சக மத சகோதரர்கள் தங்களது எல்லா பண்டிகைகளையும் தியாகம் செய்திருக்கிறார்கள். அரசாங்கமும் பண்டிகை காலங்களில் ஊரடங்கு சட்டத்தைக் கடுமையாக அமுலுக்குக் கொண்டு வந்தது. அந்த மக்கள் அச்சட்டத்தை பெரு மனதோடு ஏற்று அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடாமல் இருந்திருக்கின்றார்கள் என்பதை பார்த்தோம்.

 கொரோனாவினால் எத்தனையோ உயிர்கள் உலகளாவிய ரீதியில் காவு கொள்ளப்பட்ட நிலைகண்டு பெருநாளைக் கொண்டாடுவது அவசியமில்லை என்று தியாகம் செய்தனர். புத்தாடைகள் எதுவும் வாங்காமல் சர்வ சாதாரணமாக பண்டிகைகளை அனுசரித்து நடந்து கொண்டனர்.இத்தகைய தியாகம் வரவேற்கத்தக்கது. அவர்களின் பரஸ்பர புரிதல்கள் புகழப்பட வேண்டியது.

எனவே, முஸ்லிம் சகோதரர்களே!  சகோதரிகளே! தாய்மார்களே! 

பெருநாள் கொண்டாட்டம் சுன்னத்தானது. முஸ்லிம்கள் அனைவரும் பர்ளான (கட்டாய கடமையான) எத்தனையோ விடயங்களைக்கூட இவ் அசாதாரண சூழலில் தியாகம் செய்து இருப்பதுபோல் நாம் ரமழான் பண்டிகையைக் கொண்டாடுவதை இம்முறை மட்டும் நிறுத்துவதுடன் புத்தாடைகள் வாங்குவதையும் பெருமளவில் குறைத்து மிகவும் பக்குவமாக மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட முனைய வேண்டும்.

அவ்வாறே நாம் எதிர்கொள்ளவிருக்கின்ற தேர்தலையும் மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். சிறுபான்மையாக வாழ்கின்ற நாம் இன்று பெரும்பான்மை சமூகம் எங்களைப் பழிவாங்குகின்ற நிலைக்கு இட்டுச் செல்லாத  வகையில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க வேண்டும். எதிர்கால முஸ்லிம் சந்ததியை இந்நாட்டு பெரும்பான்மை சமூகத்தோடு இணக்கப்பாட்டோடு வாழ்வதற்குரிய வழிவகைகளைச் செய்து கொடுக்க வேண்டும். ஓர் உன்னத அரசியல் கலாசாரத்தை எதிர்கால சந்ததிக்கு விட்டுச் செல்ல வேண்டும்.

அந்த வகையில், நாம் இலங்கை நாட்டவர் என்ற சிந்தனையோடு வாழ்கின்றோம் என இந்நாட்டு பெரும்பான்மை மக்களுக்கு உணர்த்தும் வகையில் எமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். சுயநலமிகள்,  அமைச்சுப் பதவிகளுக்கு பேரம் பேசுபவர்கள், சலுகைகளுக்காக பெரும் போராட்டங்களை நடத்துபவர்கள்… என்ற மோசமான கருத்துக்களைக் கொண்டிருக்கின்ற பெரும்பான்மை சமூகத்திடமிருந்து அவற்றைக் களைந்து விடக்கூடிய வகையில் எமது எதிர்கால அரசியல் செயற்பாடுகளை ஆக்கிக் கொள்ள வேண்டும்.

அவ்வாறாயின் எமது நியாயமான உரிமைகளையும் சலுகைகளையும் சாத்விகமான அமைப்பிலே வென்றெடுக்க முயற்சிக்க வேண்டும். இதற்கு ஒரு படி மேலே சொல்வதாக இருந்தால் இலங்கை நாட்டுக்கு விசுவாசம் மிக்கவர்களாக நாம் வாழ்ந்து காட்ட வேண்டும். இந்நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற எல்லா நல்ல சிந்தனைகளுக்கும்  அபிவிருத்தி முயற்சிகளுக்கும் பார்வையாளர்களாக இல்லாமல் பங்காளிகளாக இருந்து நாட்டை வளப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *