கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி பரந்த அறிவும் தெளிவான சிந்தனையும் உடையவர்

மௌலவி ஏ.எல்.எம். இப்ராஹிம்

கலாநிதி சுக்ரி அவர்கள் பல்கலைக்கழக மாணவராகவிருந்த காலம் முதல் எனக்கு அவருடன் மிகவும் நெருங்கிய தொடர்பிருந்து வருகிறது. இஸ்லாத்தைக் கற்பதிலும் பொதுவாக முஸ்லிம் உலக விவகாரங்களிலும் குறிப்பாக இலங்கை முஸ்லிம்களின்பிரச்சினைகளிலும் அவருக்குள்ள ஈடுபாடு காரணமாகவும் நாங்கள் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புக்கள் கிடைத்தன. 1969ல் பேராதனைப் பல்கலைக் கழகத்தில்அவரும் எனக்கு விரிவுரையாளராக விருக்கின்றார். அப்போது அவரது புலமை,நாவன்மை, வாசிப்பிலும் ஆராய்ச்சியிலும் எழுத்துத்துறையிலும் அவருக்குள்ள ஆர்வம் என்பவற்றை நான் நன்கு அறிந்து கொண்டேன். 

கலாநிதி அவர்களுக்கு எந்த இஸ்லாமிய இயக்கத்துடனும் நேரடியான தொடர்பில்லாதபோதும் இஸ்லாமிய வரலாற்றையும் இஸ்லாமிய எழுச்சிக்காக உழைத்த முன்னோடிகள், அவர்களின் பணிகளில் காணப்பட்ட தனித்துவங்கள் பொதுப்பண்புகள் என்பவற்றையும் அவர் மிக நுணுக்கமாக மதிப்பீடு செய்தார்.

 
அவர் பரந்த அறிவும் தெளிவான சிந்தனையும் உடையவர். மிகவும் சிக்கலான பிரச்சினைகளையும் எல்லோரும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் விதமாக சரளமான மொழிநடையில் தொகுத்துக் கூறும் வல்லமை உள்ளவர். 

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, கலாசாரம், இஸ்லாமியக் கட்டடக்கலையும் கவின்கலைகளும் இஸ்லாமிய வரலாறும் பண்பாடும், அரபுத்தமிழ் என்பன போன்ற அவரது கட்டுரைகளிலும் கலைக் கழஞ்சியங்களுக்காக அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளிலும் இத்துறைகளில் அடிப்படையான பல உண்மைகளை மிகவும்தெளிவாக விளக்கியிருக்கிறார். கலாநிதி அவர்களின் இந்தச் சிறப்புக்களும் உள்நாட்டிலும் சர்வதேச அரங்குகளிலும் தமிழ், ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளில் அவர் ஆற்றியுள்ள உரைகளும் தற்காலத்தில் இவ்வாறான பங்களிப்புக்களைச் செய்யும் முஸ்லிம் சிந்தனையாளர்களில் இவரும் ஒருவர் என்று நிறுவுகின்றன. 

ஜாமிஆ நளீமிய்யாவில் அவரது சேவைகளினூடாகவும் இஸ்லாமிய சிந்தனையில் அவர் எழுதிவரும் ஆசிரியர் கருத்துக்கள், ஆய்வுக் கட்டுரைகள் மூலமாகவும் கற்பதிலும் ஆராய்ச்சித்துறை, எழுத்து பேச்சு போன்ற துறைகளிலும் ஈடுபாடுள்ள பல நூறு பட்டதாரிகளைத் தொடர்ந்து அவர் உருவாக்கி வந்துள்ளார்.

தனது மாணவர்களில் பலர் மிகவும் வளமாக வாழ வழிகாட்டிய அவர், தனக்கே உரிய எளிமையான முறையில் வாழ்ந்து நன்கு அர்ப்பணத்துடனும் அமைதியாகவும் சேவை புரியும் கலாநிதி அவர்கள் ‘’’அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவரை அல்லாஹ் உயர்வடையச் செய்கிறான்’’ என்ற ஹதீஸுக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகவும் விளங்கினார். 

(ஜாமிஆ நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பான ராபிததுன் நளீமிய்யீன் 21.6.2008ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி அவர்களின் சேவையை பாராட்டும் முகமாக ஒழுங்கு செய்திருந்த நிகழ்வில் வெளியிடப்பட்ட சிறப்பு மலரிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *