கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி எனது நினைவலைகள்…

எம்.ஐ.எம். அமீன் B.A (Hons.), M.A Cey.

முன்னாள் முதுநிலை விரிவுரையாளர்

பேராதனைப் பல்கலைக்கழகம்


சமய சிந்தனை மேலோங்கிய முஸ்லிம் சமூகம் ஒன்றின் தேவையை அவர் தன் இளமைக் காலத்தில் உணர்ந்திருந்தமைதான் அவரைப் பல்கலைக்கழகத்தின்புகழ்மிக்க பதவியையும் உதறித் தள்ளிவிட்டு நளிமீய்யாவின் பணிப்பாளர் பதவியை ஏற்கத் தூண்டியிருக்க முடியும். கொழும்பு ஸாஹிராவில் க.பொ.த. உயர்தர வகுப்பில் படிக்கும் போது அக்கல்லூரியின் அதிபராக இருந்த மர்ஹூம் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் அக்காலை புகழும் செல்வாக்கும்மிக்க இலங்கையின்; நிருவாகச் சேவைப் (C.C.S.) பதவியைத் துறந்துவிட்டு முஸ்லிம் சமூக மேம்பாட்டுக்காக ஸாஹிராவின் அதிபராகப் பதவியை ஏற்றிருந்தார். அவரது அம்முன்மாதிரியும் சுக்ரியை பல்கலைக் கழகத்தைத் துறந்து நளிமீய்யாவை அடையத் தூண்டுகோலாக இருந்திருக்க முடியும்.


அறிஞர் எம்.சி. சித்திலெப்பை 1884 மார்ச் 31 ஆந் திகதி வெளியிட்ட ‘முஸ்லிம் நேசனில்’ உலகக் கல்வியையும் சமயக் கல்வியையும் சமகாலத்தில் மாணவர்களுக்கு வழங்கி அவ்விரு துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் சான்றிதழ் வழங்க வேண்டுமென்று எழுதினார். இந்தியாவில் ஹைதராபாத் நகரில் அமைக்கப்படப்போகின்ற கல்லூரி எத்தகைய கல்வியை வழங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கும் போதே மேற்குறித்த கருத்தை எடுத்தாண்டார். கண்டி மாநகரில் அவர்1884இல் கண்ட இக்கனவு பேருவலையில் 1973ம் ஆண்டு நளீம் ஹாஜியாரின் தியாகத்தால் நனவாகியது. இவ்விரு துறைகளிலும் தகைமை பெற்ற ஒருவர் அதனை வழிநடத்துவதற்குத் தேவைப்பட்டார். அறிஞர் சித்திலெப்பை 1892 இல் தோற்றுவித்த மருதானை ஸாஹிராக் கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி பயின்று பேராதனைப் பல்கலைக் கழகத்தில் அறபு இஸ்லாமிய நாகரிகத் துறையில் சிறப்புப் பட்டத்தையும,;எடின்பரோ பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றிருந்த கலாநிதி சுக்ரி இப்பதவிக்குத் தகுதியானவர் என்று இனங் காணப்பட்டார். உலகியற் கல்வியிலும் சமயத்துறைக் கல்வியிலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தமையும் இளமைத் துடிதுடிப்பு அவரிடம் இருந்தமையும் நளீமீய்யா பணிப்பாளர் பதவிக்கு அவர்இனங்காணப்படுவதற்குக் காரணமாயின. அதனால் நளீமிய்யாவில் காலியாகியிருந்தபணிப்பாளர் பதவியை ஏற்குமாறு அவர் கேட்கப்பட்டார்.பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய நாகரிகத்துறையின் தலைமைப்பீடம் பேராசிரியர் செய்யது அஃதல் இமாம் ஓய்வு பெற்றதால் காலியாக இருந்தது. அவ்விடத்தை நிரப்பி அறபு, இஸ்லாமிய நாகரிகத்துறையை விருத்திசெய்வதற்கு சுக்ரியின் உதவி அவசியமாகியது. பட்டப்பின்படிப்பைப் பூர்த்தி செய்த மற்றெவரும் அப்போது பேராதனையின் அறபு, இஸ்லாமிய நாகரிகத்துறையில் இருக்கவில்லை. பொதுநலவாய புலமைப்பரிசிலைப் பெற்று பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இருந்து சுக்ரி அவர்கள் எடின்பரோ சென்று கலாநிதிப் பட்டத்தைப் பெற்று வந்திருந்ததால் தொடர்ந்து பேராதனையில் கடமையாற்றி அப்பல்கலைக்கழகத்தினதும் அறபு, இஸ்லாமிய நாகரிகத்துறையினதும் வளர்ச்சிக்கு உதவுவார் என்றே பல்கலைக்கழக விரிவுரையாளர் சமூகம் கருதியது.பாரம்பரியப் பாணியில் சமய கல்வியை வழங்கும் மத்ரஸாக்கள் நீண்டகாலமாக இலங்கையில் இருந்தன. இந்த மரபுக்கு மாற்றமாக நளிமீய்யா உலகியற் கல்வியையும் சமயக் கல்வியையும் சமகாலத்தில் வழங்கியதால் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த நளீமிய்யா உதவ முடியும் என்ற நம்பிக்கை பலரிடம் இருந்தது. இவ்விழிப்புணர்ச்சியை நளிமீய்யாவினூடாகசமூகத்துக்குக் கொண்டு செல்லும் வாய்ப்பை நன்கு பயன்படுத்த கலாநிதி சுக்ரி போன்ற ஒருவர் தேவைப்பட்டார். இதனால் சுக்ரி ஒரு மனப் போராட்டத்தில் சிக்கிக் கொண்டார். இதுபற்றி தன் நண்பர்கள், அறிஞர்கள், உறவினர்கள் போன்றவர்களிடம் கதைத்தது போல பல்கலைக் கழகத்தில் ஒன்றாகப் பணிபுரிபவர்கள் என்றதோரணையில் எங்களுடனும் பல சந்தர்ப்பங்களில் கதைத்ததுண்டு. சமூக நலன் கருதி நளீமிய்யாவின் பணிப்பாளர் பதவியை ஏற்கப் போவதாக ஒரு தினம் என்னிடம்கூறினார். இது பற்றி உறுதியான ஒரு தீர்மானம் எடுத்துவிட்டார் என்று கருதினேன். பேராதனைப் பல்கலைக் கழகத்தின் அறபுத்துறையில் பட்டப்பின்படிப்பு நெறிகளில் தேர்ச்சி பெற்ற ஒருவரும் இருக்கவில்லை. ஆதலால் சுக்ரியை இழப்பது பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் துறையில் பயில்வோருக்கு மட்டுமன்றி அதன்பால் ஆர்வம் காட்டுவோருக்கு பெரும் நஷ்டம் என்று கருதி அவரது முடிவைமாற்ற முடியாது போனாலும் கால தாமதப்படுத்தும் நோக்கோடு கதைத்தேன். பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பணியாற்றுமாறும் நளிமீய்யாவில் ஒரு கௌரவப் பணிப்பாளர் என்ற அந்தஸ்தில் செயற்பட்டு வழிகாட்டுமாறும் அறபுத்துறையில்அவரது மாணவர்களாகிய ஏ.எல்.எம். இப்றாஹிம் அவர்களும் நானும் பணிபுரிவதால் அவருக்கு நாம் முழுமையாக ஒத்தாசையாக இருந்து அவரது வேலைப்பழுவைக்குறைக்க முடியும் என்றும் ஆலோசனை கூறினேன். அப்போது அவர் ‘நான் நளிமீய்யாவில் பணிப்பாளர் பதவியை ஏற்க முடிவு எடுத்துவிட்டேன்’ என்று உறுதியாகக் கூறினார்.அவரது இம்முடிவு பேராதனைப் பல்கலைக் கழகத்தின் அறபுத் துறைக்குப் பெரும் இழப்பைக் கொடுத்தது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான் பதவியேற்று ஒரு வருடமளவே கழிந்திருந்தது. எனது பட்டப்பின் படிப்பு நெறியை அறபுத்துறையில்அவரது வழிகாட்டலில் மேற்கொள்ள ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த எனக்குத் தனிப்பட்ட முறையில் பெரும் நஷ்டமாகியது. அதுமாத்திரமன்றி பேராதனைப் பல்கலைக் கழகத்தில் அறபுத்துறையில் அப்போது பட்டப்பின்படிப்புத் தகைமை பெற்ற ஒருவரும் இல்லை என்பதைக் காண்பித்து அறபு, இஸ்லாமிய நாகரிகப் பாடங்களின் உள்வாரி சிறப்புத் துறைப் பயிற்சி நெறிப்பாட போதனைக்குப் பல்கலைக்கழக நிருவாகம் அதன்பின் அனுமதி கொடுப்பதில்லை என்று முடிவு எடுத்துஅமுல்படுத்தியது. கலாநிதி சுக்ரி அவர்கள் நளிமீய்யாவில் பணியாற்றி சிறப்புமிக்க பணிகளை மேற்கொண்டு சமூகத்துக்கான சேவைகளைச் செய்தபோதும் பல்கலைக்கழகத்தை விட்டு அவர் நீங்கியமை எதிர்காலத்தில் அவர் அடைய முடிந்திருந்த பல பதவி உயர்வுகளைப் பெறும் வாய்ப்பை இழக்கச் செய்தது.பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து அவர் இருந்திருந்தால் ஒரு பேராசிரியராக மட்டுமன்றி பல்கலைக் கழகம் ஒன்றின் உபவேந்தராக பதவி உயர்வு பெறவும்அதன்வழி பொதுநலவாய நாடுகளின் கல்விமான்களிடையே அவர் செல்வாக்குப் பெற்றிருக்கவும் முடியும். அத்தகைய அருமையான வாய்ப்புக்களை இழப்பதை ஒரு பொருட்டாகக் கருதாது, நளிமீய்யாவில் பணியாற்றுவதனூடாக சமூம மறுமலர்ச்சி ஒன்றுக்கு வித்திடலாம் என்ற எதிர்பார்ப்புடன்தான் பல்கலைக்கழகத்தில் தனது விரிவுரையாளர் பதவியை இராஜினாமாச் செய்திருப்பார் என்றே கருதுகின்றேன்.


பல்கலைக்கழகத்தில் போதனாசிரியர் பதவியில் இருந்து விலகிய போதும் அதன் வெளிவாரி வளவாளராகத் தொடர்ந்து ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றார். பல்கலைக் கழகத்தின் பட்டதாரிப் பாடநெறி, பட்டப்பின்படிப்புப் பாடநெறி போன்ற பாடத்திட்டங்களை வடிவமைப்பதி;ல் பல சந்தர்ப்பங்களில் உதவியுள்ளார். பட்டப்படிப்பு, பட்டப்பின்படிப்பு பரீட்சைகளில் பல்கலைக்கழக வெளிவாரிப்பரீட்சகராகத் தொடர்ந்தும் கடமையாற்றி வருகின்றார். புதிதாத தோற்றுவிக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கௌன்சில் உறுப்பினராகவும் பாடநெறிகளை வடிவமைக்கும் வளவாளராகவும் செயற்பட்டு வருகின்றார். பல்கலைக்கழகப் பாடபோதனையில் நேரடியாகப் பங்கு கொள்ளாதபோதும் தொடர்ந்தும் இத்துறையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயற்படுகின்றார். க.பொ.த. உயர்தரப்பரீட்சைக்கான இஸ்லாம், இஸ்லாமிய நாகரீகப் பாடங்களின் பாடத்திட்டத்தை உருவாக்குவதிலும் பெரும் பங்கு கொண்டுள்ளார் என்பது சுட்டிக் காட்டத்தக்கதாகும்.சிறந்ததொரு ஆய்வாளராகவும், பன்மொழிப் புலமை கொண்டவராகவும் நடுநிலை நின்று பிரச்சினைகளை அணுகுபவராகவும் இருப்பதால் முஸ்லிம் சமூகத்தால் மட்டுமன்றி இலங்கையர் சமூகத்தில் அவர் பிரபல்யம் பெற்றுள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும். இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள அறபுமொழிக் கல்வெட்டுக்கள் பற்றிய ஆய்வுகளை அவர் மேற்கொண்டு வருவதும் இலங்கையின் புதைபொருள் ஆய்வாளர் சங்கத்தில் அவர் ஓர் உறுப்பினராக இருந்து செயற் படுவதும் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை விஞ்ஞான ரீதியாக நிறுவப் பெரும் துணையாகலாம்.


கால் நூற்றாண்டு காலமாக நளிமீய்யாவில் அவர் ஆற்றிவரும் பணியை மதிப்பிடுவதற்கு நளிமீய்யாவின் உள்ளிருந்து எழும் ஆய்வாளர்களே மிகப் பொருத்தமானவர்கள் ஆவர். எனினும் நளிமீய்யாவை மையமாக வைத்து இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தொகுத்து எழுத அவர் எடுத்த முயற்சி பாராட்டத்தக்கது. வரலாற்றுத்துறை சார்ந்த முஸ்லிம்களல்லாத கல்விமான்களின் துணை கொண்டு இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை ஆதாரபூர்வமாக Muslims of Sri Lanka – Avenue to Antiquity எனும் நூல் மூலம் முன்வைத்துள்ளார். முஸ்லிம் சமூகத்துக்கு வரலாறு இல்லை என்ற குறையை இதன் மூலம் நீக்கியுள்ளார். இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தொகுத்து எழுத வேண்டும் என்ற தேவையை 1880களில் அறிஞர் சித்திலெப்பை வலியுறுத்தினார். இலங்கை முஸ்லிம்கள் ஒரு தனி இனத்தவர் அல்லர், அவர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றும் தமிழ் இனத்தவர்கள் என்று சேர் பொன்னம்பலம் ராமநாதன் எழுதிய கட்டுரைக்கு மறுப்பாக 1907இல் ஐ.எல்.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் எழுதிய ‘திரு. இராமநாதனது இலங்கைச் சோனகர் இன வரலாறு எனும் ஆராய்ச்சிக் கட்டுரைக்கான ஒரு திறனாய்வு’ எனும் நூலில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தான் எழுதவில்லை என்றும் அதனை எதிர்கால சந்ததிக்காக விட்டுச் சென்றுள்ளேன் என்றும் குறித்துள்ளார். அறிஞர் சித்திலெப்பையும் முஸ்லிம் சமூக மேம்பாட்டுக்காக உழைத்த ஐ.எல்.எம்.ஏ. அஸீஸூம் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு எழுதப்பட வேண்டும் என்று கண்ட கனவு கலாநிதி சுக்ரி அவர்கள் நளிமீய்யாவை மையமாக வைத்து மேற்கொண்டமுயற்சியால் நனவாகியுள்ளது.பல நூல்களின் ஆசிரியரான கலாநிதி சுக்ரி உள்நாட்டு வெளிநாட்டுச் சஞ்சிகைகளில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளதுடன் நளிமீய்யாவின் இஸ்லாமிய சிந்தனை எனும் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக நின்று அரும்பணியாற்றுகின்றார். தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்தில் ‘இஸ்லாமிய சிந்தனை’க்கு ஒரு சிறப்பிடம் உண்டு. குறிப்பாக உயர்கல்வி கற்கும் மாணவர்கள், சமூக சீர்திருத்தத்தை விளையும் புத்திஜீவிகள், ஆய்வாளர்கள் ஆகியோருக்கு இச்சஞ்சிகை பெரிதும் பயன்படுகிறது. தரமுள்ள இளம் எழுத்தாளர்கள் பலருக்கு அது களம் அமைத்துக் கொடுத்துஅவர்களை எழுத்துலகில் அறிமுகப்படுத்தியுள்ளது. இஸ்லாம் இஸ்லாமிய நாகரீகம் எனும் துறை சார்ந்த மாணவர்களுக்கு இச்சஞ்சிகை ஒரு வரப்பிரசாதமாகவே உள்ளது.கலாநிதி சுக்ரி வெளியுலக பல்கலைக் கழகங்களுடன் நளிமீய்யாவைத் தொடர்புபடுத்தி நளிமீய்யா மாணவர்க்கான கல்வி வாய்ப்பை புகழ்மிக்க பல்கலைக் கழகங்களில் படிப்பதற்காக பெற்றுக் கொடுத்துள்ளமை கருத்திற் கொள்ளத்தக்கதாகும். அறிஞர் அபுல்ஹஸன் அலி நத்வியின் கருத்துக்களை நூல்வடிவில் கலாநிதி சுக்ரிவழங்கியதோடு நில்லாது அவரை நளிமீய்யாவுக்கு அழைத்து இலங்கைமுஸ்லிம்களுக்கும் வெளியுலக முஸ்லிம் அறிஞர்களுக்கும் இடையே அறிவுப் பாலம் ஒன்றை அமைத்துள்ளார். சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை தற்கால இலங்கையில் ஏற்பட்டுள்ளது. அந்த முயற்சியிலும் அவர்ஈடுபட்டுழைக்கின்றார். அவரது பன்மொழிப் புலமையும் அவரிடம் உள்ள பேச்சாற்றலும் கல்வி ஞானமும் பரந்த மனப்பாங்கும் இப்பணிக்கும் பெருந் துணையாக உள்ளன.சிறந்த குணப்பண்புகள் பலவற்றை கலாநிதி சுக்ரி கொண்டுள்ளார். விருந்தோம்பும் பண்பு, அறிஞர்களை மட்டுமன்றி கல்வி தேடும் மாணவர்களையும் மதிக்கின்ற பண்பு போன்றன அவரிடம் உண்டு. அவர் எந்த ‘தஃவா’ இயக்கத்தையும் சார்ந்திராத போதும் தனது எழுத்துக்கள் மூலமும் பேச்சுக்கள், வானொலி உரையாடல்கள் மூலம் தஃவாப் பணியைச் செய்து வருவதும் சுட்டிக் காட்டத்தக்கது. இஸ்லாமியப் பணியில் ஈடுபட்டுமேலும் பல பணிகளை சமூகத்துக்காற்ற அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக.

(ஜாமிஆ நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பான ராபிததுன் நளீமிய்யீன் 21.6.2008ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி அவர்களின் சேவையை பாராட்டும் முகமாக ஒழுங்கு செய்திருந்த நிகழ்வில் வெளியிடப்பட்ட சிறப்பு மலரிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *