கொரோனா வைரஸும் அரசியல் காய் நகர்த்தல்களும்

பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ்

கொரோனா வைரஸ் இன்று பூலோக அரசியலிலும் தேசிய அரசியலிலும் பல மாற்றங்களை தோற்றுவித்து வருகிறது. மக்களின் சமய, சமூகத் தொடர்புகள், நம்பிக்கைகளில் பெரிய தாக்கம் செலுத்தியுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள சர்வதேசமும் தனித் தனி நாடுகளும் கொரோனாவைக் கட்டுப்படுத்துதல், சுகாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணுதல் என்ற போர்வையில் பல்வேறு அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களையும் அரசியல் கெடுபிடிகளையும் நடைமுறைப்படுத்துவதை அவதானிக்க முடிகிறது.

எவ்வாறு கொரோனா வைரஸ் ஜனநாயகத்தை மீள் அமைப்புக்குள் உள்ளாக்கப் போகிறது என்பது இன்று உலக அளவில் எழுப்பப்படும் கேள்வியாகும். பல நாடுகளில் ஜனநாயகம் ஏற்கனவே பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில் இறுக்கமான அதிகாரப் பாணியிலான ஆட்சியமைப்பு முறைகள், இராணுவத் தலையீட்டுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

மற்றும் பல அரசாங்கங்கள் நிறைவேற்று அதிகாரத்தை உச்ச எல்லை வரை பலப்படுத்த நினைப்பதோடு சமூகம் மற்றும் தனி நபர் சார்ந்த சுதந்திரத்திற்கும் உரிமைகளுக்கும் கட்டுப்பாடுகளை வரையறுப்பதற்கும் முயற்சித்து வருகின்றன. சர்வாதிகாரம் எதிர் ஜனநாயகம் என்ற அரசியல் நெருக்கடிக்கும் கோவிட்- 19 எனும் உலகத் தொற்று வழிவகுத்துள்ளது. இன்னொரு வகையில் கூறுவதானால் ஜனநாயகத்துக்கு இருக்கின்ற குறைவான வெளியையும் கோவிட்- 19 செயலற்றதாக்கியுள்ளது.

ஜனநாயகத்திற்கான வெளிகளை நிறைவேற்று அதிகார கட்டமைப்பிற்குள் சிறைப்படுத்தும் வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. சுகாதார நெருக்கடியைப் பயன்படுத்தி தமக்கு சாதகமான திட்டங்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தனி நபர் சுதந்திரமும் கூட்டுச் சுதந்திரமும் மறுக்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன. பிரஜைகளின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

வைரஸ் பற்றிய தவறான செய்திகள் என்ற பெயரில் கருத்துச் சுதந்திரத்தை தணிக்கை செய்வதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. கொரோனா வைரஸ் பரவுகிறது. அது ஆபத்தானது என்று செய்தி வெளியிட்ட நிறுவனங்கள் மீது சீனா தணிக்கைச் சட்டங்களை பிரயோகித்தது.

அரசாங்கம் வைரஸ் நெருக்கடியைக் கையாண்ட விதம் தவறானது என்று குறைகளைச் சுட்டிக்காட்டியதற்காக தாய்லாந்து அரசாங்கம் பத்திரிகையாளர்களர் மீது அழுத்தங்களைப் பிரயோகித்தது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் தொகை பற்றிய அரசாங்கத்தின் புள்ளிவிபரம் நம்ப முடியாதது என்று எகிப்து அரசாங்கத்தை விமர்சித்த கார்டியன் நிரூபர் எகிப்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

கொரோனா பற்றிய செய்திகளை வெளியிடும்போது அரசாங்கத்தின் தகவல்களுக்கு முரணில்லாத வகையில்; நடந்து கொள்ள வேண்டும் என்று உள்ள+ர் ஊடகங்கள் மீது இந்;திய அரசு அழுத்தங்களைப் பிரயோகித்தது.

தேர்தல்கள் நடத்துவதை பல நாடுகள் ஒத்திபோட்டு வருகின்றன. அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் தேர்தல்கள் தள்ளிப்போடப்பட்டுள்ளன. தேர்தல்களைத் தள்ளிப்போடுவது மக்களின் ஜனநாயக உரிமைக்கு விதிக்கப்படும் தடை என்பது உண்மைதான். ஆனால், தேர்தல் நடத்துவதற்கான சூழலும் பாதுகாப்பும் இல்லாதபோது அல்லது வைரஸ் தொற்று மேலும் பரவலாம் என்ற நிலைமையில் தேர்தல் தேவையா என்பது மிக முக்கிய கேள்வியாகும். தேர்தலைத் தள்ளிப்போடுவதும் நடத்துவதும் கட்சியரசியலின் தேவையைக் கடந்ததாக இருக்க வேண்டும்.

பூகோள ரீதியான ஐக்கியம் குறைந்து செல்வதாகவும் ஒவ்வொரு நாட்டிலும் கட்சிகளுக்கிடையிலான பகைமைகள் கூர்மையடைந்துள்ளதாகவும் கொரோனாவை அழிக்கும் முயற்சிக்கு இது ஒரு பெரிய தடை எனவும் உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் எட்ஹானோம் உலக நாடுகளை எச்சரித்;துள்ளார். மக்களுக்கிடையிலான பிளவுகளும் அரசியல் கட்;சிகளுக்கிடையிலான விரிசல்களும் அரசியல் ஆதாயத்திற்காக மட்டும் செயல்படுவதும் கொரோனா பிரச்சினைகளில் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போன்றது என்றும் தமது உரையில் டெட்ரோஸ் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு கொடிய வைரஸ். மக்களைப் பிளவுபடுத்தி விளையாடக்கூடிய மோசமான கொடிய வைரஸ். உண்மையான தேசிய ஐக்கியத்தை பலப்படுத்த நாடுகள் முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினைகளும் கொரோனா ஏற்படுத்தியுள்ள அரசியல் நெருக்கடிகளும் இவற்றிலிருந்து சிறிதும் மாறுபட்டதல்ல. தேர்தலை நடத்துவதில் அல்லது பாராளுமன்றத்தை மீளக் கூட்டுவதில் அரசும் எதிர்க் கட்சிகளும் இரு முகாம்களாகப் பிரிந்துள்ளன. அரசியல் சாசன நெருக்கடிக்குள் நாடு தள்ளப்பட்டுள்ளது. இப்பிரச்சினையின் நடு நாயகமாக இருப்பது கொரோனாதான். சில பொலிஸ் தடுப்புக் காவல்களும் கைதுகளுகளும்கூட கொரோனாவின் நிழலில் நடைபெறுவதாகவே தெரிகிறது. பல கூறுகளாக பிரிக்கும் இனவாத அலையை ஏற்படுத்துவதற்கும் சில பெரிய ஊடகங்கள் நெருக்கடியையே முக்கிய ஆயுதமாககப் பயன்படுத்தி வருவதைக் காண முடிகிறது. இதனை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்பட வேண்டும் என்ற சட்டத்தை இலங்கை அரசு கட்டாயப்படுத்துவதில் ஒரு பரபரப்பு நிலை தோன்றியது. முஸ்லிம்கள் ஏற்க மாட்டார்கள் என்பது தெளிவான விடயம். புதைக்கும் பழக்கம் ஏனைய சமயங்களிலும் இருந்தபோதும் அங்கு ஒரு மயான அமைதி நிலவியது. அதாவது, சமயங்கள் சமயங்களுக்கு ஆதரவாக இயங்க முன்வரவில்லை.

சர்வதேச முன்மாதிரிகளும் உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல்களும் தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருந்தன. வைரஸ் தாக்கத்தினால் இறந்த நபரின் உடலைப் புதைப்பதற்கு அல்லது எரிப்பதற்கு அனுமதி தரப்பட்டிருந்தது. ஓவ்வொரு சமயத் தலைவர்களும் அவரவர் சமயத்தின் நம்பிக்கைகளுக்கேற்ப (எரித்தல் அல்லது புதைத்தல்) செய்யலாம். இறந்தவரின் உடலிலிருந்து கிருமித் தொற்று சாத்தியமில்லை என்பதும் முறைப்படி புதைப்பதன் மூலம் பிரச்சினைகள் இல்லை என்பதும் உலக சுகாதார நிறுவனத்தின் நிலைப்பாடாகும்.

இந்த மண்ணை விட்டு வாழ்வை முடித்துக் கொள்ளும்போது மரணத்திற்கான கௌரவம் அந்த நபருக்கு அல்லது அந்த உடலுக்குத் தருவதுதான் உயர்ந்த உலக நியாயமாகும். “என்னிடம் சொன்னார்கள் சவப் பெட்டி ஒன்று கொண்டு வரும்படி. சவப் பெட்டியை எங்கு வாங்குது என்று எனக்குத் தெரியாது. எங்கேயெல்லாமோ அலைந்தேன்” என்று தாயை இழந்த (முஸ்லிம்) மகன் ஒருவரின் அலறல் கேட்டு நான் அதிர்ந்து போனேன். உங்கள் பார்வைக்கும் அது வந்திருக்கலாம். சவப்பெட்டி அவனது விளக்கத்துக்கு அப்பாற்பட்டது.
எரிப்பதா, புதைப்பதா? என்பது அல்ல பிரச்சினை. ஒரு தனி நபரின் சுதந்திரம், ஒரு சமூகத்தின் நம்பிக்கைகள் காரணமின்ற சீரழிக்கப்படக் கூடாது என்பதுதான் மனித உரிமைகளின் அரிச்சுவடி ஆரம்பிக்கிறது. இதை முஸ்லிம்கள் எதிர்த்தனர். அரசுக்கு வெவ்வேறு ஆலோசனைகளை முன்வைத்தனர். திரும்பத் திரும்ப இதைப் பேசினர். அரசுக்கு எடுத்துச் சொல்வதில் பல்வேறு முயற்சிகள் நடைபெற்றன. அரசு கடுமையான நிலைப்பாட்டில் இருந்தது.

முஸ்லிம்களின் எதிர்ப்புக்களை கொரோனா தொடர்பான அரசாங்க அமைப்புக்கள் தூக்கி எறிந்தபோதும் பாவப்பட்ட அந்த மக்களின் குரல்கள் உலக அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தம் ( ICCPR ) பின்வரும் விதியை உலகம் இலங்கைக்குச் சுட்டிக்காட்டி முஸ்லிம்களின் சமய நம்பிக்கைகளுக்கு முரணாக செயற்பட வேண்டாம் எனவும் கூறியுள்ளது.

இலங்கைக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்குமான அப்பொது விதி இவ்வாறு அமைந்துள்ளது.
“சுதந்திர சிந்தனைக்கும் சமயத்துக்குமான பாதுகாப்பை வழங்கும் ICCPR இன் ஒப்பந்தத்தின்படி புதைப்பதை தடுப்பதை அனுமதிக்க முடியாது.”

ஆனால், இலங்கையில் உடல்கள் எரிக்கப்படுவது மாற்ற முடியாத கோட்பாடாக ஏன் வலியுறுத்தப்படுகிறது? எரிக்கப்பட வேண்டும் என்பதற்கு திருப்தியான பதிலில்லாத நிலையில் எழுந்தமானமாக அல்லது தவறான கருதுகோள்களின் பின்னணியில் முஸ்லிம்களின் உடல்கள் ஏன் எரியூட்டப்பட்டுள்ளன? உலக அறிவியலும் உலக சுகாதார நிறுவனமும் கூறுவதை ஏற்காது உள்நாட்டு வைத்தியர்களின், விஞ்ஞானிகளின் பக்கச்சார்பற்ற முடிவுகளும் இல்லாது கொரோனா வைரஸின் தாக்கங்கங்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு முஸ்லிமின் உடலை எரிப்பது நியாயமா? இதுதான் முஸ்லிம்களின் கேள்வி. மனித உரிமைச் சாசனங்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் பதில் தரவேண்டிய பொறுப்பு உண்டு.

இலங்கை முஸ்லிம்கள் கொரோனா தனிமைப்படுத்தலின் போது தமது இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்’ என்று ‘அல்- அரபிய்யா’ செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் மட்டும்தான் முஸ்லிம்களின் உடல்கள் எரியூட்டப்படுவதாக உலக அளவில் செய்திகள் பரவியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *