கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி: தென் இலங்கை ஈன்றெடுத்த அறிவியல் முதுசம்!

-ஜெம்ஸித் அஸீஸ்-

21.6.2008ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி அவர்களின் சேவைகள் மற்றும் கல்விப் பணிகளை பாராட்டும் முகமாக ஜாமிஆ நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பான ராபிததுன் நளீமிய்யீனினால் ஒழுங்கு செய்யப்பட்ட விழாவையொட்டி 2008 ஜுலை அல்ஹஸனாத் இதழ் மற்றும் எங்கள் தேசம் பத்திரிகையில் (ஜூன் 15- 30, 2008 இதழ்) ஜெம்ஸித் அஸீஸ் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் சில மாற்றங்களுடன் ஒரு கட்டுரையாக தொகுக்கப்பட்டு இணையதளத்தில் மீள்பிரசுரமாகிறது.

இலங்கை முஸ்லிம் தேசத்தின் சிந்தனைச் சிற்பியாய் உருவெடுத்த அறிஞர் பரம்பரையில் கலாநிதி சுக்ரி அவர்களும் 1980களிலேயே இடம்பிடித்து விட்டார். இஸ்லாமிய உலகில் தடம்பதித்த கலாநிதி சுக்ரியின் காலடித்தடங்கள் அழியாச் சின்னங்களாய் காட்சியளிக்கும்.

உண்மையாகவே கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களின் பன்முக ஆளுமைப் பண்புகள் மகத்தான சேவைகள், காத்திரமான கல்விப் பணிகள் மற்றும் அவரது அறிவியல், சிந்தனைப் பங்கு தொடர்பாக நூற்கள் எழுதப்பட வேண்டும். இவரது பணிகள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என்பதில் இரு கருத்தக்களுக்கு இடமில்லை.

பன்மொழிப் புலமை பெற்ற கலாநிதி சுக்ரி எவரையும் கவரும் வகையில் எளிய நடையில் பேசக்கூடியவர். கருத்தாழமிக்க, நாவன்மைமிக்க பேச்சாளர்ளூ பன்னூலாசிரியர். 

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, இலங்கை முஸ்லிம்களின் சமூக- பண்பாட்டுப் பெருமானங்கள் தொடர்பில் பாரிய பங்களிப்புச் செய்த அறிஞர்களான ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ், ஏ.எம்.ஏ. அஸீஸ், எம்.எம்.எம். மஹ்ரூப் வரிசையில் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களும் குறிப்பிடத்தக்கவர்.

இலங்கை பல்கலைக்கழகங்களில் அரபு- இஸ்லாமிய நாகரிகத்துறை வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய மூலகர்த்தாக்களுள் கோடிட்டுக் காட்டத்தக்க ஒருவர். பேராசிரியர் இமாமிற்கு அடுத்து மலர்ந்த இஸ்லாமிய நாகரிகத்தின் பொற்காலத்தின் பிரதான சிற்பி என கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் இவர் குறித்துக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

பிறப்பும் ஆரம்பக் கல்வியும்

தென் மாகாணம், மாத்தறை மாவட்டத்தில் 1940 ஜூன் 24இல் முஹம்மத் அலி- ஆயிஷா பீவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரது குடும்பம் வணிகப் பின்னணியுடைய ஒரு குடும்பமாகும்.

சிறு பிராயத்திலிருந்தே கல்வியில் தீவிர ஆர்வம் கொண்டிருந்த இவர், சென். தோமஸ் கிறிஸ்தவப் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை கற்றார். ஆரம்ப மொழிமூலம் ஆங்கிலமாக இருந்தபோதும் பின்னர் ஏற்பட்ட மொழிமாற்றக் கொள்கையின் காரணமாக ஆங்கில மொழிமூலம் கற்பதற்காக தர்கா நகரிலுள்ள அல்-ஹம்ரா வித்தியாலயத்திற்குச் சென்றார். அங்கு 1956 வரை கற்ற இவர் அங்குதான் SSC (Senior School Certificate) பரீட்சையை எழுதினார். பின்பு HSC (Higher School Certificate) கற்பதற்காக கொழும்பு ஸாஹிராக் கல்லூரிக்கு சென்றார். அப்போது சாஹிரா கல்லூரியின் அதிபராக இருந்தவர் அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களாவார். பிற்பட்ட காலத்தில் மிகச் சிறந்த ஆய்வாளர்களாக விளங்கிய எம்.எம். மஃரூப், முஹம்மத் சமீம் ஆகியோரிடமும் கா. சிவத்தம்பியிடமும் கல்வி கற்கும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியமை தனது அறிவும் ஆற்றலும் வளர்வதற்கு காரணமாக அமைந்தது என அவரே குறிப்பிடுவார். இவர் அல்லாமா இக்பாலின் சிந்தனைகளால் கவரப்பட்டதும் அவரது நூல்களை அதிகமாக வாசித்ததும் சாஹிரா கல்லூரி வாழ்வில்தான்.

கல்லூரியில் அனைத்து துறைகளிலும் ஒரு முன்னணி மாணவனாக திகழ்ந்தார். கலாநிதி அமீர் அலி, கல்வியியலாளர் எஸ்.எச்.எம். ஜெமீல் ஆகியோர் இவரது சாஹிரா கல்லூரி வகுப்புத் தோழர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆரம்பக் கல்வி கற்கும் வேளையிலேயே தனது மொழித்துறை இலக்கியம், (நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள்) மற்றும் விவாத அரங்குகள் போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருந்ததாகவும் அதன்பால் தூண்டிய ஆசிரியர்களை நன்றி கண்கொண்டு பார்ப்பதாகவும் அடிக்கடி கூறுவார். எப்போதும் தனது வளர்ச்சிக்காக பாடுபட்ட அத்தனை ஆசிரியர்களையும் நன்றியுணர்வுடன் ஞாபகப்படுத்தி அவர்களுக்காக பிரார்த்தனை புரிவதாகவும் அவர் குறிப்பிடுவது அவரது மிகச் சிறந்த பண்புகளுள் ஒன்று.

பல்கலைக்கழக வாழ்வும் கலாநிதி பட்டப் படிப்பும்

1960இல் இலங்கை பல்கலைக்கழகம் (இன்றைய பேராதனைப் பல்கலைகழகம்) சென்ற கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் அறிஞர் எம்.எம்.ஏ. அஸீஸ் அவர்களின் ஆலோசனைக்கு அமைய அரபு மொழியை விஷேட துறையாக தேர்ந்தெடுத்தார். இத்துறையில் 1965ஆம் ஆண்டு முதலாம் தரத்தில் சித்தி அடைந்தார். அதே ஆண்டு அரபு- இஸ்லாமியத்துறை விரிவுரையாளராகவும் நியமனம் பெற்றார். மௌலவி ஏ.எல்.எம். இப்ராஹிம், மர்ஹூம் எம்.ஜே. எம். ரியாழ், ஜனாப் முக்தார் ஏ. முஹம்மத் ஆகியோர் விரிவுரையாளர் சுக்ரி அவர்களின் வழிகாட்டலின் கீழ் தமது பட்டப் படிப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் இமாம் அவர்களிடம் மூன்று வருடங்களாக கற்கக் கிடைத்ததை பெரும் பாக்கியமாகக் கருதினார். முஸ்லிம்கள் வரலாற்றுத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பு மற்றும் இப்னு கல்லூன் போன்றோர் பற்றியும் பேராசிரியர் இமாமிடருந்து கற்றுக் கொண்டதோடு அரபு மொழியையும் அவரிடமிருந்து கற்றுக் கொண்டார்.

பேராசிரியர் மௌனகுரு, செங்கை ஆழியான் போன்றோரும் கலாநிதி சுக்ரியும் ஒன்றாக பல்கலைக்கழகத்தில் கற்றவர்கள். அவர்கள் இப்போதும் கலாநிதி சுக்ரி அவர்களைப் பற்றி புகழ்ந்தே கூறுவர். (கலாநிதி சுக்ரி அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து பேராசிரியர் மௌனகுரு அவர் பற்றி எழுதியிருந்த குறிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்தது)

வாழ்வில் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் போதெல்லாம் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களிடம் கலந்தாலோசிப்பது அவர்களின் வழமையாக இருந்தது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரபு மொழியை சிறப்புப் பாடமாக எடுத்ததும் அரபு இஸ்லாமிய துறை விரிவுரையாளராக இணைந்து கொண்டமையும் அஸீஸின் ஆலோசனைப்படியே.

கலாநிதி சுக்ரி ஊயுளு CAS (Ceylon Administrative Service) பரீட்சைக்கு விண்ணப்பித்ததைக் கேள்விப்பட்ட அறிஞர் அஸீஸ் அவரை அழைத்து நிர்வாகத் துறையை விட கல்வித்துறையில் கவனம் செலுத்துங்கள் என்று ஆலோசனை கூற அவரும் அவ்வாறே செயற்பட்டார். ‘அறிஞர் அஸீஸ் என்னை ஒரு மாணவனாக மட்டுமன்றி, தனது மகனாகவும் கருதினார்” என கலாநிதி சுக்ரி நன்றியுடன் குறிப்பிடுவார்.

சிறுபராயத்திலிருந்தே இலக்கியத்தில் ஈடுபாடுடையவராக இருந்த கலாநிதி சுக்ரி அவர்களின் இலக்கிய ஈடுபாட்டை தெளிவுபடுத்த பிற்காலத்தில் சுபைர் இளங்கீரன் குறிப்பிடப்பட்ட கருத்தே போதுமானது.

‘கலாநிதி சுக்ரி இலக்கியத் துறையில் தொடர்ந்தும் ஈடுபட்டிருந்தால் இலங்கையில் மிகப் பெரும் இலக்கியவாதியாகத் திகழ்ந்திருப்பார்.”

பட்டதாரி மாணவனாக இருந்த காலத்தில் கலாநிதி சுக்ரி நாட்டின் பல பாகங்களிலும் நடைபெறும் மீலாத் விழாக்கள், அல்குர்ஆன், ஹதீஸ் அமர்வுகள் மற்றும் விஷேட நிகழ்வுகள், சமூக விவகாரங்கள் தொடர்பான ஒன்றுகூடல்களில் சொற்பொழிவாற்றி வந்தார். 1960களில் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் மேடைப் பேச்சுக்களில் புகழ் பெற்றிருந்த மஸ்ஊத் ஆலிம், மௌலவி யூ.எம். தாஸிம் நத்வி, மௌலவி ஏ.ஆர்.எம். ரூஹூல் ஹக், ஜனாப் எம்.பி.எம். மாஹிர் வரிசையில் இளைஞராக இருந்த சுக்ரியும் சிறப்பிடம் வகித்தார். சமூகப் பணியிலும் அழைப்புப் பணியிலும் இயக்கம் சாராமல் உழைத்த இளைஞர் சுக்ரி தனது ஊரான மாத்தறையில் இஸ்லாமிய கலாசார மையம் எனும் சமூக சேவை அமைப்பைத் தோற்றுவித்து அதன் தலைவராக இருந்து அமைப்பை நெறிப்படுத்தி வந்தார்.

1973இல் பொதுநலவாய நாடுகளின் புலமைப் பரிசில் பெற்று பட்டப் பின்படிப்பை மேற்கொள்வதற்காக தனது மனைவியுடனும் கைக்குழந்தையாக இருந்த மகனுடனும் ஐக்கிய இராச்சியம் சென்று எடின்பரோ சர்வ கலாசாலையில் இணைந்து கொண்டார். அங்கு சென்ற இவர் ஹி. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர் அபூதாலிப் அல்மக்கியின் ‘கூதுல் குலூப்’ எனும் நூலை ஆய்வுசெய்து கலாநிதிப் பட்டத்தை பூரணப்படுத்தினார். இவ்வாய்வு மேற்பார்வையாளராக இருந்த கீழைத்தேய அறிஞர் மொன்ட் கொமரி வொட் அவர்களை எப்போதும் நன்றியுணர்வுடன் ஞாபகமூட்டுவார்.

கலாநிதி சுக்ரி தனது கல்விப் பாதையில் ஏற்பட்ட தடங்கல்கள், குடும்பப் பொறுப்புகளுக்கு மத்தியில் தனக்குக் கிடைத்த பொதுநலவாய புலமைப் பரிசில் நிதியில் ஒரு பகுதியை சேமித்து 1975இல் இங்கிலாந்தில் இருந்தே குடும்பத்தோடு சென்று புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியதும் குறிப்பிடத்தக்கது.

1981 ஏப்ரல் முதல் மரணிக்கும் வரை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளராகவும் அதன் நிர்வாக சபை மற்றும் பரிபாலன சபை உறுப்பினராகவும் கடமையாற்றி வந்த கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள், ஜாமிஆ நளீமிய்யாவின் வளர்ச்சிக்காகவும் அதன் சர்வதேச பிரவேசத்திற்காகவும் முழுமூச்சாய் உழைத்தவர். நளீம் ஹாஜியாரின் வேண்டுகோளுக்கு இணங்க ஜாமிஆ நளீமிய்யாவை கையேற்ற கலாநிதி சுக்ரி அதன் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டார். ஜாமிஆவின் மேம்பாட்டிற்காக நளீம் ஹாஜியார் மேற்கொண்ட அனைத்துப் பணிகளுக்கும் உறுதுணையாக இருந்தார். ஜாமிஆவின் நலன்களை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட எல்லா வெளிநாட்டுப் பயணங்களிலும் நளீம் ஹாஜியாருடன் இவரும் சென்றார். மேலும் சர்வதேச இஸ்லாமிய நிறுவனங்கள், உலகளாவிய இஸ்லாமிய பல்கலைக்கழகங்களுடன் தொடர்பு கொண்டு அவற்றுடன் நளீமிய்யாவின் உறவைப் பலப்படுத்துவதற்கு மூலகர்த்தாவாக திகழ்ந்தார்.

ஜாமிஆவின் பட்டச் சான்றிதழை சர்வதேச பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் பெற்றதாக மாற்றுவதற்கு அயராது பாடுபட்டார். பல சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஜாமிஆவிற்கு விஜயம் செய்யவும் அவர்களில் சிலர் ஜாமிஆவில் தங்கி நின்று விரிவுரைகளை நிகழ்த்தவும் மூலகாரணமாய் அமர்ந்தவர் கலாநிதி சுக்ரி அவர்களே. அந்த வகையில் மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி, ஷேக் முஹம்மத் அல்கஸ்ஸாலி, பேராசிரியர் குர்ஷித் அஹ்மத், கலாநிதி ஹுசைன் ஹாமித் ஹஸ்ஸான், கலாநிதி அஹ்மத் அல்அஸ்ஸால் போன்ற பெரும் இஸ்லாமிய அறிஞர்கள் இவரது ஏற்பாட்டில் ஜாமிஆவிற்கு வருகை தந்தவர்களாவர். அவரது அனுபவம், புலமைத்துவம், பல்துறை ஆளுமைகள், ஜாமியாவின் கல்வித் தரம் என்பன ஜாமிஆவை தேசிய, சர்வதேச ரீதியில் பிரபலம் அடையச் செய்வதில் பிரதான பங்கு வகித்தன.

எழுத்துத்துறை, பேச்சுத் துறை, ஆய்வு மற்றும் இலக்கியத்தில் ஆழமான ஈடுபாடுடைய இவர், 1981 முதல் இலங்கையில் வெளிவரும் இஸ்லாமிய ஆய்வுச் சஞ்சிகையான இஸ்லாமிய சிந்தனையின் ஆலோசகராகவும் மரணிக்கும் வரை அதன் பிரதம ஆசிரியராகவும் இருந்து இந்நாட்டு கற்றறிந்த முஸ்லிம் சமூகத்தில் சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்தி வந்தார். ஆய்வு முறைமையை கற்றுக் கொடுத்தார். சுருங்கக் கூறினால் அவர் ஜாமிஆவின் வளர்ச்சிப் பாதையில் ஒரு மைல்கல்.

தவிரவும் இக்ரஃ தொழில்நுட்பக் கல்லூரியின் உருவாக்கத்திற்கும் பெரும் பங்காற்றியுள்ள கலாநிதி சுக்ரி அதன் பொறுப்பாளராகவும் பதவி வகித்தார். இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் பல்வேறுபட்ட பொறுப்புகளை வகித்து வந்த இவர், அவற்றின் அரபு இஸ்லாமிய துறையின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார். இதனாலேயே நீண்ட காலமாக பேராதனை- தென் கிழக்குப் பல்கலைக்கழகங்களில் அரபு- இஸ்லாமிய அரபு இஸ்லாமிய துறை மேற்பார்வையாளராகவும் கடமை புரிந்தார்.

தேசிய மட்டத்திலான பல அரச, அரச சார்பற்ற அமைப்புகளின் அங்கத்துவம் வகித்த இவர் முஸ்லிம் தேசத்தின் அரும்பெரும் சொத்து என்றால் மிகையில்லை.

தொழில் ரீதியான நியமனங்கள்

 • 1965- 1973 வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் அரபு மொழி- இஸ்லாமியக் கலை விரிவுரையாளராக கடமையாற்றினார்.
 • 1976- 1980 வரை களனி பல்கலைக்கழகத்தில் அரபு மொழி- இஸ்லாமியக் கற்கைத் துறை தலைவராகவும் (Head of the Department) சிரேஷ்ட விரிவுரையாளராகவும் (Senior Lecturer) கடமை புரிந்தார்.
 • 1981 ஏப்ரல் முதல் 2020.05.19 அன்று அவர் மரணிக்கும் வரை ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளராக பணியாற்றி வந்தார்.

உயர் பதவி பதவிகளும் கௌரவ அங்கத்துவமும்:

 • 1976- 1978 வரை கல்வி அமைச்சின் சமயக் கல்விப் பிரிவின் ஆலோசனைக் குழுவில் ஓர் அங்கத்தவராக இருந்து கல்வித் துறையின் வளர்ச்சிக்கு சேவையாற்றினார்.
 • 1978- 1992 வரை யுனெஸ்கோவின் இலங்கை இலங்கை தேசிய சபை உறுப்பினராக இருந்து பணி செய்தார்.
 • 1978- 1979 வரை கல்வி மறுசீரமைப்புக் குழுவின் அங்கத்தவராக இருந்து தனது புலமைப் பங்களிப்பை நல்கினார். அப்போதைய கல்வி அமைச்சரால் இவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 • 1990 முதல் க.பொ.த. உயர் தர இஸ்லாம் பாடப் பரீடசையின் பிரதான பரிசோதகராக பணியாற்றி வந்தார்.
 • 1991 முதல் 1998 வரை இலங்கை தொல்பொருள் ஆராய்ச்சி பட்டப் பின்படிப்பு நிறுவனத்தின் நிர்வாக சபை உறுப்பினராக இருந்து ஆய்வுப் பணிகளுக்கான தேசிய பங்களிப்பை நல்கி வந்தார்.
 • 1993 முதல் இல்மா சர்வதேச பெண்கள் பாடசாலையின் கல்விப் பிரிவின் ஆலோசனை சபை உறுப்பினராக இருந்து அதன் வளர்ச்சியில் பங்கெடுத்தார்.
 • 1995 முதல் இஸ்லாம் பாட நூல் தொகுப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்து செயலாற்றினார்.
 • 1996இல் இலங்கை தேசிய நூதனசாலையின் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
 • 1996 டிசம்பர் 7ஆம் திகதி முதல் நீண்ட காலமாக தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரபு மொழித் துறை- இஸ்லாமியத் துறைக்கான விஷேட ஆலோசகராக பணி செய்தார்.
 • 1999 ஆகஸ்ட் 03இல் தேசிய கல்வி ஆணைக்குழுவினால் பாடசாலை பாடத் திட்டத்தின் வரலாற்றுப் பாடத்தை மீளாய்வு செய்யும் குழு அங்கத்தவராக இருந்து பணி புரிந்தார்.
 • 2001 ஆகஸ்ட் முதல் நீண்ட காலமாக தென்கிழக்குப் பல்கலைக்கழக அரபு மற்றும் இஸ்லாமிய டிப்ளோமா கற்கை நெறிக்கான விஷேட ஆலோசகராக சேவையாற்றி வந்தார்.
 • பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய நாகரிகத் துறையில் M.Phil கற்கை மாணவர்களின் மேற்பார்வையாளராகவும் செயலாற்றி வந்தார்.
 • பேராதனை, கொழும்பு, தென்கிழக்குப் பல்கலைக்கழகங்களில் அரபு மொழி, இஸ்லாமிய நாகரிக கற்கைநெறி வெளிவாரி பரிசோதகராக கடமையாற்றி வந்துள்ளார்.
 • 2001 முதல் மொரோக்கோவிலுள்ள இஸ்லாமிய உலக பல்கலைக்கழகங்களுக்கான சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினராக  இருந்து செயலாற்றி வ்ந்தார்.
 • 2002 ஜுலை 10இல் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி ஆலோசனை சபை உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.

இவை தவிர பல நிர்வாகக் குழுக்கள் மற்றும் முகாமைத்துவ சபைகளில் அங்கத்துவம் வகித்துள்ளார்.

வெளியீடுகள்:

பன்மொழிப் புலமை பெற்றிருந்த கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பல நூல்களை யாத்துள்ளார்.

 • Islam and Education- 1979
 • Mankind in Perl- 1979
 • அல்குர்ஆனும் அதன் வாழ்வியலும்
 • இஸ்லாமிய அழைப்புப் பணியும் நவீன கால சவால்களும்- மொழிபெயர்ப்பு நூல்- 1982
 • ஆத்ம‘னிகளும் அறப் போராட்டங்களும் – 1984
 • ஹதீஸ் வரலாறும் முக்கியத்துவமும்- 1993
 • நளீம் ஹாஜியார் வாழ்வும் பணியும்- 1993
 • சிந்தனைப் போக்கில் திருப்பம் ஏற்படுத்திய இமாம் அல்கஸ்ஸாலி (ரஹ்)- 1993
 • இஸ்லாத்தில் மனித உரிமைகள்- 1996
 • முஸ்லிம் எழுத்தாளர்கள் முன்னுள்ள பொறுப்பு- 1996
 • இஸ்லாமிய பண்பாட்டு மத்திய நிலையங்கள்- 1997
 • மதமும் அறிவியலும்- 1997
 • இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடுகள்- 1999
 • காலத்தின் அறைகூவலும் முஸ்லிம்களின் பணியும்- மொழிபெயர்ப்பு நூல்

கலாநிதி பெற்றுக் கொண்ட விருதுகளும் கௌரவங்களும்:

 • 1976 இல் எடின்பரோ பல்கலையில் கலாநிதிப் பட்டப் படிப்பை பூரணப்படுத்தியதை முன்னிட்டு அதே ஆண்டில் இஸ்லாமிய கலாசார மையம் (MICH) அவரை பாராட்டி கௌரவித்தது.
 • கலை, இலக்கியம் மற்றும் கலாசாரத்துக்கு பங்களிப்புச் செய்ததை முன்னிட்டு 2003 ஒக்டோபர் 14இல் கலாசார அமைச்சு ரோஹன ரன்ஸிலு (Rohana Ransilu) விருது வழங்கி கௌரவித்தது.
 • இந்து சமய கலாசார அமைச்சு கலைமாமணி பட்டம் வழங்கி கௌரவித்தது.
 • 2004இல் ஸாஹிரா கல்லூரியில் நடைபெற்ற தமிழ்ப் பாரம்பரியத்தைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றிய அறிஞர்களை கௌரவிக்கும் தழிழ் மொழி விழாவில் கொளரவமும் விருதும் வழங்கப்பட்டது.
 • 2005இல் நடைபெற்ற YMMA இன் 55ஆவது வருடாந்த மாநாட்டில் 2005ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆளுமைக்கான Y விருது (Y Personality Award) வழங்கி கௌரவிக்கப்பட்டார். நாட்டில் இஸ்லாமிய அறிவு, பாரம்பரியம் மற்றும் சிந்தனையின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக YMMA இவ்விருதை வழங்கி கௌரவித்தது.
 • 2005 இல் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் அமைப்பு (ஜம்இய்யதுத் தலபதில் இஸ்லாமிய்யா) தனது 25 வருட பூர்த்தியை முன்னிட்டு நடத்திய 12 இளைஞர் தேசிய மாநாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக “வஹ்தா” எனும் விருது வழங்கி கௌரவித்தது.
 • ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது வருடாந்த மாநாட்டில் கல்வி, கலாசார, சமூகப் பங்களிப்பிற்காக “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கி கௌரவித்தது. மீடியா போரம் குறித்த விருதை வழங்க தீர்மானித்து செயற்படுத்தத் தொடங்கியவேளை முதன் முதலில் கலாநிதி சுக்ரியையே தெரிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சம்.

மடை திறந்த வெள்ளம் போல் நிதானமாய், கம்பீரமாய், ஆற்றொழுக்கான மொழிநடையில் முக மலர்ச்சியோடு பேசும் கலாநிதி சுக்ரி, தான் நளீமிய்யாவின் பழைய மாணவர்களால் கௌரவிக்கப்பட்ட நிகழ்வில் (2008) அழுதழுது, தளர்ந்து போன குரலில் தனக்கு சற்றேனும் பெருமை வந்துவிடக்கூடாது என்ற ஆழ்ந்த கவலையில் மொழிந்த வார்த்தைகளும் சிந்திய கண்ணீர் துளிகளும் சான்றோரின் வரலாற்றை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தின.

ஆடம்பரமற்ற, ஆரவாரமற்ற, தன்னடக்கமும் ஆத்மிக பக்குவமும் உள்ள அறிஞருக்குரிய பணிவுடமையும் நற்குணமும் அறிஞர்களை மதிக்கும் பண்பும் ஒருங்கே பெற்ற இத்தகைய ஒரு பெருமகனை இன்று எமது நாடும் சமூகமும் இழந்து நிற்கிறது.

வல்ல இறைவன் அவரது அனைத்து நற்கருமங்களையும் ஏற்று அங்கீகரிப்பானாக! தவறுகளை மன்னித்தருள்வானாக! உயர்ந்த சுவனபதியில் அவரைக் குடியமர்த்துவானாக!

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் உட்பட அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *