வகுப்பறையில் முகாமைத்துவச் செயன்முறை

ஆர். சதாத் (MA), (Med), MPhil (R)

வருகைதரு விரிவுரையாளர் (OUSL, NIE)

‘முகாமைத்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட வேலையை எதிர்பார்க்கும் குறிக்கோள்களை நோக்கி இட்டுச் செல்வதன் பொருட்டு திட்டமிட்ட நடவடிக்கைகளினூடாகச் சென்று உரிய வழிகாட்டலோடு சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மாற்றங்களுடன் உரிய தலைமைத்துவத்தினால் பல உதவியாளர்களைக் கொண்டு பல வேலைகளையும் நிறைவேற்றிக் கொள்ளும் ஒழுங்கு முறையாகும்’ எனக் கூறலாம்.

இதன் மூலம் முகாமைத்துவச் செயன்முறை ஓர் ஒழுங்கமைப்புடன் வினைத்திறனும் செயற்படுதிறனும் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையை வெளிப்படுத்தும். இந்த வகையில் முகாமைத்துவ செய்முறைக்குரிய பிரதான கடமைகளாக திட்டமிடல், ஒழுங்கமைத்தல், மேற்பார்வை, செயற்படுத்தல் என்பவற்றைக் கூறலாம்.

திட்டமிடல்:

ஒரு சிறந்த முகாமையில் திட்டமிடல் முதலிடம் வகிக்கிறது. ஒரு வீட்டுக்கு அடித்தளம் போன்றது. திட்டமிடல் என்பது உரிய முறையில் வளங்களைக் கருத்திற் கொண்டு அமைத்துக் கொண்ட குறிக்கோள்களை உச்ச மட்டத்தில் அடைந்து கொள்வதற்காக ஏற்கனவே தயாரித்துக் கொள்ளப்பட்ட வேலைத் திட்டத்தைக் குறிக்கும். 1917ல் போல்ஷிக் புரட்சியின் மூலம் உருவாக்கிய சோவியனின் பொருளாதார திட்டங்கள் அந்நாட்டை வல்லரசாக்கியது. இதனால் கவரப்பட்ட வளர்முக நாடுகள் பொருளாதார முறைகளையும் கல்வி முறைகளையும் திட்டமிடத் தொடங்கின.

ஒரு வாழ்க்கைத் தேர்ச்சி பாட ஆசிரியர், மாணவர்களின் விழுமியங்களை விருத்தி செய்யும் வேலையில் ஈடுபட வேண்டுமானால் முதலில் அவர் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்கள் எண்ணிக்கை, பால், வயது, குடும்பப் பின்னணி, கல்வி மட்டம் போன்றவற்றை கருத்தில் கொண்டு முதலில் திட்டமிடல் வேண்டும். இந்த வகையிலேயே தற்போது பாடசாலை நடைமுறையியல் வேலைத்திட்டம், பாடத்திட்டம் என செயல்பட்டு வருகிறது.

திட்டமிடலில் முதலில் குறிக்கோள்களை தீரமானித்துக் கொள்ளுதல், இடத்தை தெரிவு செய்தல், அதற்கு நாம் அடையும் வழி, அதற்குரிய வளங்களை தீர்மானித்தல்… என பல்வேறு வகையில் திட்டமிடல் வேண்டும்.

ஒழுங்கமைத்தல்:

முகாமைத்துவ செயன்முறையில் ஒழுங்கமைப்பு பிரதானமானது. திட்மிடலின்போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதற்கு தேவையான பின்னணியை தயாரித்தல் ஒழுங்கமைத்தல் என சுருங்கக் கூறலாம்.
உதாரணமாக, ஓர் ஆசிரியர் செயற்பாட்டுத் திட்டத்துடன் கற்பிக்க வகுப்பறைக்குச் செல்கிறார். ஆனால், அங்கு வகுப்பறை சுத்தம் செய்யப்படவில்லை; தளபாடங்கள் ஒழுங்கின்றிக் கிடக்கின்றன.

மாணவர்கள் ஒத்துழைப்புத் தராமல் அவர்கள் விருப்பத்துடன் வேறு செயலில் ஈடுபடுகிறார்கள் என்றால் திட்டமிட்டவையால் எந்தப் பிரயோசனமும் இல்லாமல் போய்விடும். எனவே, அங்கு வகுப்பறை ஒழுங்கமைப்பு அவசியம் எனலாம்.

பதவி தொகுதியினர் கல்வியை மதிப்பிடுதல் இத்தகைய திட்டங்களில் ஒரு பிரதான அங்கமாவதோடு அதனோடு தொடர்புடைய ஒழுங்கமைப்பையும் ஏலவே செயன்முறையோடு நிர்ணயித்துக் கொள்ளப்பட வேண்டும்.

இயக்குதல் அல்லது செயற்படுத்தல்:

முகாமைத்துவச் செயன்முறையில் இயக்குதல் அல்லது செயற்படுத்துதலும் ஒன்றாகும். இது முகாமையாளரிடம் எதிர்பார்க்கப்படும் முக்கிய கடமையாகும்.
தீர்மானித்துக் கொண்ட நோக்கங்களை அடைந்து கொள்ள பெருந்தொகையானோரை செயலில் ஈடுபடுத்தி பொருத்தமான விதத்தில் வேலையை ஒப்படைப்பதையும் இணைப்பாக்கம்,சமூகமயமாக்கம் செய்வதையும் இயக்குதல் எடுத்துக்காட்டுகிறது.

ஒருவர் தலைமைத்துவத் திறன், ஆளுமை ஒரு நிறுவனத்தில் இருக்கும் அத்தனை அம்சங்களிலும் விருத்தியுடையவராக இருப்பதோடு, அந்நிறுவனத்தைக் கொண்டு செல்லக் கூடிய நன்மைகளை எடுத்து இயக்கவும் பிரதிகூலங்கள் வரும்போது தட்டிக் கழிக்கவும் உள்ள செயல்திறனும் செயற்படுத்தும் திறனும் உள்ளவரை நிறுவனத்தை இயக்குகிறார் எனலாம்.
இயக்குதல் சிறப்படைய வேண்டுமாயின் ஆளணிகளுக்கிடையில் நெருங்கிய தொடர்பு இருத்தல் வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆசிரியர்- மாணவர், மாணவர்- மாணவர் தொடர்பில் அவதானிக்கப்படும்.

கட்டுப்பாடு:

முகாமைத்துவ செயன்முறையில் வரும் அடுத்த கட்டம் கட்டுப்பாடு. திட்டம் செயற்படுத்தப்படும் முழுக் காலத்திலேயும் நிறைவேற்ற வேண்டிய முன்னேற்றக் கட்டுப்பாடும் திட்டம் நிறைவேற்றப்படும் காலத்தில் பருவத்துக்கொரு முறையும் திட்டம் செயற்படுத்தலின் இறுதியிலும் நடைபெற வேண்டிய மதிப்பீடும் இதில் உள்ளடங்கியுள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட குறிக்கோள்கள் நிறைவேற்றக்கூடிய விதத்தில் எதிர்பார்க்கப்பட்ட வேலைகள் எதிர்பார்க்கப்பட்ட நபர்களின் கையால், எதிர்பார்த்த நேரத்தில், எதிர்பார்த்த செலவு எல்லைக்குள் நிறைவேறுகின்றனவா என தொடர்ந்து விசாரணைசெய்து பார்த்தல் ஒரு திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு அத்தியாவசியமாகிறது.

சுருங்கக் கூறின் திட்டம் செயற்படுத்தப்படுதல் பற்றி அடிக்கடி விசாரணை செய்து திட்டத்திற்கு வெளியே பாயும் சந்தர்ப்பங்களை அடையாளம் கண்டு அவற்றை சீர்செய்து ஆளணியினருக்கு பயன்களைப் பெற்றுக் கொடுப்பதும் கட்டுப்பாட்டின் பணியாகும்.
எனவே, முகாமைத்துவ செயன்முறைக்குரிய பிரதான கடமைகளாக திட்மிடல், ஒழுங்கமைத்தல், இயக்குதல் அல்லது செயற்படுத்தல், கட்டுப்பாடு என்பவற்றை விளங்கி சீரமைத்து செயற்படுதலாகும். அத்தோடு, முகாமைத்துவ தளங்களை தெரிவு செய்து கொள்வதும் அவரது கடமைகளில் ஒன்றாகும்.

நிருவாகம் என்பது சுற்றுநிருபங்களை, தன் அதிகாரத்தைப் பிரயோகித்து அமுல்படுத்த முயற்சிப்பது. முகாமைத்துவம் என்பது அச்சுற்றுநிருபத்தை கால சூழ்நிலைகளை அனுசரித்து, பணியாளரிடம் விருப்பத்தை உண்டாக்கி, விளைதிறனைப் பெற முயற்சிப்பது என்பதை நன்கு உணர்ந்து வகுப்பறை முகாமையை வெவ்வேறு விதமாக பிரயோகிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *