தியாகத் திருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி விடுக்கும் வாழ்த்துச் செய்தி

கொவிட் 19 வைரஸ் பரவல் முழு உலகையும் ஒரு வகை பீதிக்குள் ஆழ்த்தி மனித சமூகத்தை சோதனைக்குட்படுத்தியிருக்கும் நிலையில் இம்முறை தியாகத் திருநாள் ஹஜ்ஜுப் பெருநாளை சந்திக்கின்றோம்.

‘அச்சமற்ற நாடு; முன்மாதிரிமிக்க முஸ்லிம் சமூகம்’ எனும் இலட்சியத்தை தன் தோளில் சுமந்து தனது குடும்பத்தினரையும் அந்த இலட்சியத்துக்காக வாழப் பயிற்றுவித்த இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் நேரிய வாழ்வு, அயராத உழைப்பு, அர்ப்பணங்கள் என்பவற்றை நினைவுகூர்ந்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் முன்னுதாரணமாகக் கொள்ளும் தினமே ஹஜ்ஜுப் பெருநாள் தினமாகும்.

ஒரு நாடு அச்சமும் பஞ்சமும் அற்ற சுபிட்சமான நாடாக மிளிர்கின்றபோதுதான் அங்கு வாழும் சமூகங்களின் ஆன்மிக செயற்பாடுகள் மேம்பாடடையும்; பண்பாடுகள் எழுச்சியுறும் என்ற நியதியைப் புரிந்து கொண்டு முஸ்லிம்கள் தமது நம்பிக்கைக் கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள் பற்றி கரிசனை செலுத்துவதைப் போன்றே தாம் வாழும் நாட்டின் அமைதி பற்றியும் சாந்தி, சமாதானம், அதன் பாதுகாப்பு, சுபிட்சம் குறித்தும் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

 ‘இறைவா (எனது) இந்த நாட்டை அமைதிமிக்க நாடாக ஆக்கி நாட்டு மக்களுக்கு உணவளிப்பாயாக!’ என்ற இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பிரார்த்தனை இதனையே பறைசாற்றுகின்றது.

அறிவியல் வீழ்ச்சி, ஒழுக்க வீழ்ச்சி, சுகாதாரக் குறைபாடு, உடல்- உள நோய்கள், அரசியல் ஒழுங்கீனங்கள், இலஞ்சம், ஊழல் முதலானவற்றுக்கு இறைவனிடம் பதில் கூற வேண்டும் எனும் அச்சமின்மை மூலகாரணமாக இருப்பது போல அச்சமும் வறுமையும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எனவே அச்சமற்ற, பாதுகாப்பான, பொருளாதார வளமிக்க நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்திட்டங்களுக்கு பங்களிப்பதும் அவற்றுக்கு முன்னுரிமை வழங்குவதும் முஸ்லிம்களாகிய எமது தலையாய பொறுப்பாகும் என்பதை உணர்ந்து செயற்பட இச்சந்தர்ப்பத்தில் திடசங்கற்பம் பூணுவோம்.

இந்நன்னாளில் உலகளாவிய ரீதியில், குறிப்பாக எமது நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து நெருக்கடிகளும்  சோதனைகளும் நீங்கி எல்லா இன மக்களும் ஆரோக்கியத்துடனும் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழவும் வருங்காலம் இருள் நீங்கி ஒளிமயமாக அமைந்திடவும் பிரார்த்திக்கின்றேன். இதயத்தின் ஆழத்திலிருந்து இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி

தலைவர்,

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

31.07.2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *